“இந்தியாவுக்கு பொருளாதார சுனாமி ஆபத்து ஏதுமில்லை” – நிர்மலா சீதாராமன்

0
22

 “மேற்கு ஆசிய போர் காரணமாக இந்தியாவுக்கு ‘பொருளாதார சுனாமி’ காத்திருக்கிறது என்ற ராகுலின் எச்சரிக்கை அர்த்தமற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவது போல இந்திய பொருளாதாரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ‘விக்சித் பாரத் சங்கல்ப் சமாவேஷ்’ என்ற கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பாஜக தொண்டர்களிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அரசையும் குறிவைப்பதாக நினைத்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்.

மேற்கு ஆசிய போர் காரணமாக இந்தியாவுக்கு ‘பொருளாதார சுனாமி’ காத்திருக்கிறது என்ற ராகுலின் எச்சரிக்கை அர்த்தமற்றது, கரோனா பெருந்தொற்று நோய் மற்றும் மேற்கு ஆசிய மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் (ராகுல்) மக்களவையில் பேசும் போதெல்லாம், இந்திய மக்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அடுத்த சில வாரங்களில் எல்லாம் அழியப் போகிறது, பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்தியாவுக்கு அப்படி எந்த ஆபத்தும் இல்லை. மாறாக, காலாண்டுக்கு காலாண்டு, ஆண்டுக்கு ஆண்டு உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரும், அவரது கட்சியும் இந்தியாவைத் தொடர்ந்து பலவீனப்படுத்துகின்றனர். இந்தியா சிக்கலில் இருப்பதாக மக்களை நம்ப வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இந்தியாவின் இந்த வளர்ச்சி ஐஎம்எஃப் போன்ற சர்வதேச அமைப்புகளாலும், ஜிடிபி தரவுகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலகளாவிய கப்பல் போக்குவரத்து, காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தினாலும், மத்திய அரசு தடையில்லா விநியோகத்தையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. இதனால், காலாண்டுக்குக் காலாண்டு, ஆண்டுக்கு ஆண்டு இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது.

2047-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய, விண்வெளி, பாதுகாப்பு உற்பத்தி மற்றும் பயோடெக்னாலஜி துறைகளில் முன்னணியில் இருக்கும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் கண்டுபிடிப்புகளும், மக்களின் கூட்டுப் பங்களிப்பும் (சப்கா சாத், சப்கா விகாஸ்) அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here