ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது.
முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூகத்தை பயன்படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி பவர்பிளேவில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கான பாதையை எளிதாக்கியது. கடைசி வரை களத்தில் நின்று 42 பந்துகளில், 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்காற்றினார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: நாங்கள் 180 முதல் 190 ரன்கள் எடுத்திருந்தால், அது ஒரு நல்ல போட்டியாக இருந்திருக்கும். ஆடுகளம் ஆங்காங்கே சற்று மாறுபட்ட வேகத்தில் இருந்தது. பந்து சில நேரம் மெதுவாகவும், சில நேரம் வேகமாகவும் வந்தன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் பந்து சற்று ஸ்விங் ஆனது. நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், எங்களால் இறுதிவரை உத்வேகத்தை பெற முடியாமல் போனது.
பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தால், ஆட்டத்துக்குள் நிலைப் ெபற்றிருக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் 15 முதல் 20 ரன்களை கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். வெங்கடேஷ் ஐயரும், விராட் கோலியும் பவர்பிளேயிலேயே ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டார்கள். நாங்கள் இந்தத் தொடரின் மிகச்சிறந்த பந்துவீச்சு அணிகளில் ஒன்றாக இருந்தோம்.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகும், நாங்கள் மிகவும் பலமாக மீண்டு வந்தோம். எங்களை நாங்களே தொடர்ந்து சவாலுக்கு உட்படுத்திக் கொண்டு, ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டே இருந்தோம். ஒட்டுமொத்தமாக இந்தத் பயணத்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. எங்களால் இறுதிப் புள்ளியைத் தாண்டிச் சென்று கோப்பையை வெல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், ஒருவேளை நாங்கள் கோப்பையை வென்றிருந்தாலும் கூட, இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.















