அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஈரான் விரும்புகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க கடற்படை கப்பல்களை குறிவைத்து ஈரான் ஏவிய 4 ட்ரோன்களை அமெரிக்கா நேற்று முன்தினம் சுட்டு வீழத்தியது. இதையடுத்து ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் 5-வது ட்ரோன் ஏவப்படும் தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இதேபோல் கடந்த திங்கட்கிழமையும் ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஹார்முஸ் ஜல சந்தியில் கண்ணி வெடிகளை போட்ட ஈரான் படகுகள் மீதும் அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறிவருகிறது. இதற்கு பதிலடி கொடுத்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம் என ஈரான் கூறியது. ஆனால் எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் குவைத் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாடு கூறியுள்ளது. இரு தரப்பு இடையே சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருவது, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு சவாலாக உள்ளது.















