ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
முதல் ஓவரின் முதல் பந்தை நித்திஷ் குமார் ரெட்டி நோ-பாலாக வீசினார். இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சஞ்சு சாம்சன். தொடர்ந்து அடுத்த பந்தை லெக் திசையில் பவுண்டரி அடித்த சஞ்சு சாம்சன் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது.
பிரஃபுல் ஹிங்கே வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். சிறப்பாக பேட் செய்து வந்த சஞ்சு சாம்சன் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 2.3 ஓவர்களில் 31 ஆக இருந்தது.
இதையடுத்து களமிறங்கிய உர்வில் படேல் இதே ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். 4-வது ஓவரை வீசிய இஷான் மலிங்கா 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதிரடியாக விளையாட முயன்ற உர்வில் படேல் 8 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் ஹுசைன் வீசிய வேகம் (116.7 கிலோ மீட்டர்) குறைந்த ஆஃப் கட்டர் பந்தில் போல்டானார்.
இதன் பின்னர் கார்த்திக் சர்மா களமிறங்க பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 57 ரன்கள் சேர்த்தது. பிரஃபுல் ஹிங்கே வீசிய 8-வது ஓவரை கார்த்திக் சர்மா பதம் பார்த்தார். இந்த ஓவரின் முதல் பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய கார்த்திக் சர்மா அடுத்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து அடுத்த பந்தை விக்கெட் கீப்பரின் பின்புறம் பவுண்டரி அடித்து அசத்தினார் கார்த்திக் சர்மா. இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து ஷிவாங்க் குமார் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை கார்த்திக் சர்மா சிக்ஸருக்கு விளாசினார். அதிரடியாக விளையாடிய கார்த்திக் சர்மா 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசிய நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை கவர் திசையில் விளாசிய போது நித்திஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனது.3-வது விக்கெட்டுக்கு கார்த்திக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி 42 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து டெவால்ட் பிரேவிஸ் களமிறங்கினார்.
10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 91 ரன்கள் சேர்த்தது. ஷகிப் ஹுசைன் வீசிய 11-வது ஓவரில் டெவால்ட் பிரேவிஸ் ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில், 15 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது இஷான் மலிங்காவிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். நித்திஷ் குமார் ரெட்டி வீசிய 14-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி விரட்ட டெவால்ட் பிரேவிஸ் தனது பங்குக்கு ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. இஷான் மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே லாங் ஆன் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.
15 ஓவர்களில் சிஎஸ்கே அணி 132 ரன்கள் எடுத்தது. பாட் கம்மின்ஸ் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட டெவால்ட் பிரேவிஸ் அடுத்த பந்தை ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். இஷான் மலிங்கா வீசிய 18-வது ஓவரின் 3-வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட டெவால்ட் பிரேவிஸ் 5-வது பந்தில் போல்டானார்.
27 பந்துகளை சந்தித்த டெவால்ட் பிரேவிஸ் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே ஜோடி 38 பந்துகளில், 59 ரன்கள் சேர்த்தது. ஷகிப் ஹுசைன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷிவம் துபே 3-வது பந்தில் போல்டானார். ஷிவம் துபே 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய பிரசாந்த் வீர் 9 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களும், அகீல் ஹோசைன் 3 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 3, ஷகிப் ஹுசைன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பிரஃபுல் ஹிங்கே, இஷான் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 181 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி பேட் செய்தது. டிராவிஸ் ஹெட் 6 ரன்களில் முகேஷ் சவுத்ரி பந்தில் அவரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அகீல் ஹோசைன் பந்தில் ஸ்பென்சர் ஜான்சனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடினார். அகீல் ஹோசைன் வீசிய 10-வது ஓவரிலும், நூர் அகமது வீசிய 11-வது ஓவரிலும் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ஹென்ரின் கிளாசன். இந்த ஜோடியின் அதிரடியால் ஹைதராபாத் அணி 12.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மட்டையை சுழற்றிய ஹென்ரிச் கிளாசன் 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார்.
அப்போது ஸ்கோர் 14.3 ஓவர்களில் 131 ஆக இருந்தது. ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 50 ரன்கள் தேவையாக இருந்தது. ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 71 ரன்கள் குவித்தது. இதையடுத்து நித்திஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். சீராக ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 38 ரன்கள் தேவையாக இருந்தது. அன்ஷுல் கம்போஜ் வீசிய 17-வது ஓவரில் இஷான் கிஷன் பவுண்டரி ஒன்றை அடித்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் நித்திஷ் குமார் ரெட்டி (11) ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சலீல் அரோரா களமிறங்கினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இஷான் கிஷன் கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் விளாசப்பட்டிருந்தது. இதனால் ஹைதராபாத் அணி வெற்றியை நெருங்கியது. 12 பந்துகளில் 13 ரன்களே தேவை என்ற நிலை உருவானது. அன்ஷுல் கம்போஜ் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய இஷான் கிஷன் 3-வது பந்தில் லாங் ஆஃப் திசையில் நின்ற உர்வில் படேலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இஷான் கிஷன் 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து ரவிச்சந்திரன் சமரன் களமிறங்க ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சலீல் அரோரா 10, ரவிச்சந்திரன் சமரன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே ஆட்டத்தின் முடிவானது குஜராதத் டைட்டன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதிப்படுத்தியது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 16 புள்ளிகளை பெற்றுள்ளது. சிஎஸ்கே அணிக்கு இது 7-வது தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி குஜராத் டைட்டன்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளையே பெற முடியும். நடப்பு சாம்பியான ஆர்சிபி அணி 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிட்டது. தற்போது ஹைதராபாத், குஜராத் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு பஞ்சாப் (13 புள்ளிகள்), ராஜஸ்தான் (12 புள்ளிகள்), கொல்கத்தா (11) ஆகிய அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.
குறைந்த வேகம்…
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பவர்பிளேவில் முதல் 3 ஓவர்களில் 43 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி அதன் பின்னர் 3 ஓவர்களில் வெறும் 14 ரன்களே சேர்த்தது.
பவுண்டரி அடிக்காத கேப்டன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில் ரன்கள் சேர்க்க தடுமாறினார். 11.3 ஓவர்கள் வரை அவர், களத்தில் நின்ற நிலையில் 21 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேன் ஒருவர் அதிக பந்துகளை எதிர்கொண்டு பவுண்டரி அடிக்காமல் ஆட்டமிழந்தது இதுவே முதன்முறையாகும்.
ரசிகர்கள் ஏமாற்றம்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியின் கடைசி ஆட்டமாக இது அமைந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் தோனி களமிறங்கக்கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் டாஸ் நிகழ்வின் போது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. அதனால் இந்த போட்டியில் களமிறங்கமாட்டார் என தெரிவித்தார். இது மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.















