தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. இந்தச் சூழலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர்பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனாலும் சில அரசியல் கட்சிகள், பல்வேறு நூதன வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை கவர முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வருமானவரித் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் கார்கள் மூலம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்திச் செல்லப்படுவதாக தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “வருமானவரித் துறை மற்றும் வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவுக்காக அதிகாரிகள் கார்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மஞ்சள் வாகன பதிவெண் கொண்ட கார்களை எடுக்காமல், வெள்ளை பதிவெண் கொண்ட கார்களை எடுத்துள்ளனர்.
மேலும் அந்த கார்களில் விதிகளை மீறி வருமானவரித் துறை என்ற பெயர் பலகையை வைத்தும் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தேர்தல் சமயத்தில் இதுபோன்ற கார்கள் மூலம் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுகிறது.
அந்த கார்களின் ஓட்டுநர்கள் தங்களை உயர் அதிகாரிகளைப் போல் காண்பித்துக் கொண்டு தேர்தலில் சட்டவிரோதப் பணத்தை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தனியார் கார்களை உடனடியாக தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை. எனவே, வருமானவரித் துறை அதிகாரிகளின் கார்களையும் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.














