தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக தமிழக முதல்வரின் தனிச் செயலரான உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக பதவி வகி்த்து வரும் ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத், தன்னிச்சையாக தனக்கு கீழ் பணிபுரியும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் குற்றம்சாட்டும் முதல்வரின் தனிச் செயலரான ஐஏஎஸ் அதிகாரிக்கும், தேர்தல் பணிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக வரும் ஏப்.17-க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.














