கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் விற்பனையகத்தில் புடவை வாங்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் குவிந்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த முடியாததால் கடந்த 5 ஆண்டுகளாக வாடிக்கையாளர்ளுக்கு தலா ஒரு டோக்கன் மட்டுமே தரப்படுகிறது.
இந்த டோக்கனை வாங்குவதற்காக பெண்களும், ஆண்களும் முந்தைய தினம் இரவே கடை வாசலுக்கு வந்து வரிசையில் நிற்கின்றனர். தினமும் சுமார் 500 பேர் வரை அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை 6 மணி நேரம் காத்திருந்து புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.
10 நிமிடம் மட்டுமே அனுமதி: அங்கு வாடிக்கையாளர் கூறும் வண்ணத்தில் புடவைகளை விற்பனையாளர்கள் காண்பிக்கின்றனர். ரூ.20 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான விலையில் பட்டுப் புடவைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு புடவை மட்டுமே வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பல புடவைகளை பார்த்து, தேர்வு செய்வதற்கு அனுமதி இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.














