சிறுவனைக் கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு விஜயயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகளைத் தேடி தனுஷ் வீட்டுக்குச் சென்ற விஜயயின் தந்தை உள்ளிட்டோர் வீட்டில் இருந்த தனுஷின் தம்பியான மைனர் சிறுவனை கடத்திச்சென்று பின்னர் நள்ளிரவில் மீனம்பாக்கம் அருகில் இறக்கிவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து தனுஷின் தாயார் அளித்த புகாரின் பேரில் புரட்சி பாரதம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன், பெண்ணின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிட்டது என்பதால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனக்கோரி வனராஜா உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதன் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் எம்எல்ஏ, மற்றொருவர் காவல்துறை உயரதிகாரி, மற்றொரு பெண் முன்னாள் எஸ்ஐ.
தற்போது அவர்களுக்குள் சமரசமாகிவிட்டது எனக்கூறி வழக்கை ரத்து செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். மக்கள் போலீஸார் மீதும், நீதித்துறை மீதும் வைத்துள்ள நம்பிக்கை வீணாகிவிடும்.
எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது. விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை ஏற்ற நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.














