ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை செய்ய வேண்டாம் என நெதன்யாகுவிடம் நான் சொல்லி இருந்தேன்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது.
ஈரான் பதிலடியாக சவுதி அரேபியாவின் யான்பு துறைகமுத்தில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இயற்கை எரிவாயு மையங்கள் மற்றும் குவைத்தில் உள்ள 2 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
உலகின் மிகப் பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ், இந்தியா உட்பட உலகளாவிய திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்தின் முதுகெலும்பாக உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் நேரடியாகப் பாதிக்கும். குறிப்பாக, எல்என்ஜி-க்காக இந்தியா பெரிதும் கத்தாரை சார்ந்துள்ளது. இந்தியாவின் எல்பிஜி-யில் சுமார் 80-85% கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த விநியோகத்தில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்போக்குவரத்தை ஈரான் தடுத்ததன் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு உலகம் போராடி வரும் நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் பல ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நெதன்யாகு விளக்கம்:
இந்நிலையில், ஈரானின் இயற்கை எரிவாயு வயல் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “ஈரான் இனி யுரேனியம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியாது. இந்த போரில் நாங்கள் வெற்றியை நோக்கி உள்ளோம். ஈரான் அழிவை நோக்கியுள்ளது. இப்போது ஈரான் மீதான எங்கள் தாக்குதல் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்கள் மீதுதான் உள்ளது. விரைவில் அதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வருவோம்.
‘என்ன செய்யலாம்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு யாரேனும் சொல்ல முடியுமா? அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதைத்தான் அவர் செய்வார். ஈரான் விவகாரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெளிவாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நாங்கள் மத்திய கிழக்கு பகுதியை பாதுகாக்கிறோம். இதன் மூலம் உலகை பாதுகாக்கிறோம். இந்த உலகையே ட்ரம்ப்புக்கு கடமைப்பட்டுள்ளது.
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தனித்தே தாக்குதல் நடத்தியது. மேற்கொண்டு தாக்குதலை தொடர வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அதன் பேரில் தாக்குதலை நிறுத்தி உள்ளோம்” என நெதன்யாகு தெரிவித்தார்.
ஈரான் எச்சரிக்கை:
தங்கள் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் மீதான தாக்குதல் மீண்டும் நடந்தால் தங்களின் பதிலடி மிக தீவிரமாக இருக்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். தங்கள் ராணுவம் மிக சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல் மீண்டும் நடந்தால் முழு ராணுவ பலத்தை கொண்டு தாக்குவோம் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்தப் பின்னணியில்தான் கத்தாரில் எரிவாயு மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஐரோப்பா, ஆசியாவுக்கு கத்தாரின் எல்பிஜி ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் பாதிக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
ஈரான் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள சேமிப்பு கிடங்கில் தீ பற்றியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல். தற்போது சவுதி அரேபியா மற்றும் குவைத் மீது ட்ரோன்களை கொண்டு ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதை முறியடிக்கும் பணியை அந்நாடுகளின் பாதுகாப்பு படைகள் மேற்கொண்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இராக்கின் ஆயுத குழுவான சரயா அவ்லியா அல்-தம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை அந்தக் குழு சமூக சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.














