சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்களை மூடி சீல் வைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்களை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனரான கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “இந்த புலிகள் சரணாலய பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோயில் திருவிழா ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். இவ்விழாவில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்பர்.
திருவிழாவுக்கு வரும் வாகனங்கள் எழுப்பும் ஒலிமாசு, வனவிலங்குகளுக்கும், வனத்தின் சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த திருவிழாவுக்கு ஒலி மாசு கட்டுப்பாடுகளைவிதிப்பதுடன், அப்பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்களை மூடவும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் ரிசார்ட்களை மூட வேண்டும் எனவும், வனப்பகுதியில் ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன், “சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் உள்ள 53 ரிசார்ட்கள் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 11 ரிசார்ட்கள் உரிய அனுமதி பெற்று செயல்படுகின்றன. 42 ரிசார்ட்கள் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகச் செயல்படுவது தெரியவந்தது. அதையடுத்து, அந்த 42 ரிசார்ட்களும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம், அப்பகுதிகளில் இன்னும் பல ரிசார்ட்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகின்றன அந்த ரிசார்ட்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுகுறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு வனத்துறை தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் ரிசார்ட்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக புதிதாக அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு 3 வார காலம் அவகாசம் வழங்கினர்.
அப்போது மூடப்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி இதுதொடர்பான மேல்முறையீட்டை விசாரிக்க அதிகாரிகள் மறுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்கலாம் எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை ஏப்.7-க்கு தள்ளிவைத்துள்ளனர்.














