தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா என எந்த மாநிலத்திலும் பெட்ரோல் பங்கில் கூட்டம் கிடையாது. திமுகவினர் வேண்டுமானால், நேரில் வந்து பார்க்கலாம்.
எங்கும் இல்லாத பதற்றமான சூழ்நிலையை தமிழகத்தில் திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அதுபோன்ற சூழல் இல்லை. தமிழகத்தில் செயற்கை தட்டுப்பாட்டை திமுக அரசு உருவாக்குகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக பெண்கள் மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக திமுக அரசை வீட்டுக்கு அனுப்பக்கூடிய வேலையை செய்வார்கள். ரஜினிகாந்த் சினிமாவில் தனக்கான தனி முத்திரை பதித்தவர்.
அவரை யாரும் மிரட்டவும் முடியாது. தன் மீது அவதூறு பரப்பினால், எந்த ஒரு மனிதனும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார். தனது சுயமரியாதை பாதிக்கும்போது, ரஜினிகாந்த் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது சரி தான். அவருக்கு தே.ஜ.கூட்டணி ஆதரவாக இருக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த காலதாமதமும் இல்லை. உள்ளே நடக்கும் வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எங்களுடைய தேசிய தலைவர்களிடம் பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். லெட்டர் பேடு வைத்திருப்பவர்களை எல்லாம், ஒரு கட்சியாக திமுக கணக்கில் வைத்திருக்கிறது என்றார்.














