ஈரானுக்கு ‘ஏஐ’ வதந்திகளைப் பரப்பும் ஆயுதமாகிவிட்டது: ட்ரம்ப் விமர்சனம்

0
80

கட்டிடங்களையும் கப்பல்களையும் ஈரான் ராணுவம் அழிப்பது போல செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் ஈரான் பொய் தகவல்களை பரப்பி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களை தொடங்கின. இதில், அந்த நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி உட்பட பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. 17-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ராணுவ ரீதியாக ஈரான் தோல்வி அடைந்துவிட்ட போதிலும் பொய்ப் பிரச்சாரங்களை அது வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஈரான் நீண்ட காலமாக ஊடகங்களை கையாளுவதிலும் மக்கள் தொடர்பிலும் வல்லுநர் என்று அறியப்படுகிறது. ராணுவ ரீதியாக அவர்கள் திறனற்றவர்கள், பலவீனமானவர்கள். ஆனால், ஊடகங்களுக்கு தவறான தகவல்களை உண்மையைப் போல அளிப்பதில் பாராட்டத்தக்க அளவில் மிகவும் திறமையானவர்கள். இப்போது ஈரான் பயன்படுத்தும் மற்றொரு தவறான தகவல் ஆயுதமாக ஏ.ஐ. மாறியுள்ளது. ஈரான் ராணுவம் நாளுக்கு நாள் திறமையாக போரிட்டு வருவதாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

அவர்கள் போலியான ஆளில்லா படகுகளைக் காட்டினர். கடலில் பல்வேறு கப்பல்களை சுட்டினர். பார்ப்பதற்கு இது சக்திவாய்ந்த, கொடூர தாக்குதல்களைப் போன்று தோன்றுகிறது. ஆனால், அவர்கள் தாக்கிய படகுகள் உண்மையானவை அல்ல. ஈரான் ராணுவம் ஏற்கனவே தோற்டிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த ராணுவம் மிகவும் வலிமையானது என்பதைப்போல காட்டுவதற்காக இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. ஐந்து அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தாக்கப்பட்டு அவை மோசமாக சேதமடைந்ததாக ‘தி வால் ஸ்ட்ரீட்’ ஜர்னல் பத்திரிகை உட்பட பல்வேறு பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல. ஐந்து விமானங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சேவையில் உள்ளன. அந்த ஒன்றும் விரைவில் வானத்தில் பறக்கும்.

தீப்பிடித்து எரிவதாகக் காட்டப்படும் கட்டிடங்கள், கப்பல்கள் ஆகியவை ஏ.ஐ ஆல் உருவாக்கப்பட்ட போலிச் செய்திகள். உதாரணமாக, உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க கப்பல்களில் ஒன்றான நமது அபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல், கடலில் கட்டுப்பாடு இல்லாமல் எரிவதைப் போல ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த கப்பல் எரியவில்லை என்பது மட்டுமல்ல, அது தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. கதை போலியானது. ஒரு குறிப்பிட்ட வழியில் அதை உருவாக்கிய அந்த ஊடக நிறுவனங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதற்காக துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் கூறலாம்.

உண்மை என்னவென்றால், ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது. ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் போர்களில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். ஆனால் பொய்ச் செய்திகள், ஊழல் நிறைந்த ஊடக நிறுவனங்களால் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. தீவிர இடதுசாரி பத்திரிகைகள் இதை நன்கு அறிந்திருக்கின்றன. ஆனால், தொடர்ந்து தவறான கதைகள் மற்றும் பொய்களுடன் அவை முன்னேறி வருகின்றன.

அதனால்தான் அவர்கள் மீதான நம்பகத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது. அதிபர் தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவேன் என்று 5% பத்திரிகைச் செய்திகள் மட்டுமே தெரிவித்தன. இந்த ஊழல் நிறைந்த, தேசபக்தி துளியும் இல்லாத செய்தி அமைப்புகளின் உரிமங்கள் குறித்து ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பிரெண்டன் கார் கவனம் செலுத்தி வருவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here