ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 முறை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றவரும், தனது காலத்தில் ஆதிக்கம் செலுத்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவருமான மேத்யூ ஹைடன், தனது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தையும், நவீனகால டி20 பேட்டிங் நுணுக்கங்களில் உள்ள தனது திறமையையும் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலும் 273 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைடன் 15 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவர், பல்வேறு ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி கூறும்போது, ‘‘மேத்யூ ஹைடனின் நியமனம் எங்களது பயணத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் அவரது திறன் ஆகியவை, வரும் காலங்களில் எங்களது அணியின் பேட்டிங் அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.
மேத்யூ ஹைடன் கூறும்போது, “நல்ல பேட்டிங் என்பது எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கும். ஆனால், சிறந்த பேட்டிங் என்பது ஆட்டத்தையே தன்வசப்படுத்தும். அந்தத் தரத்தைத்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நாங்கள் நிலைநாட்ட விரும்புகிறோம்” என்றார்.














