ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். அவர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 97* ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 89 ரன்களும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 89 ரன்களையும் விளாசி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார்.
தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறியதாவது: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கோப்பையில் விளையாடிக்கொண்டிருந்த போதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் சிந்தித்து, கற்பனை செய்து, பயிற்சியும் எடுத்து வந்தேன். ஆனால், நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு என் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டதாகவே கருதினேன்.
ஆனால், கடவுள் எனக்காகத் தனிப்பட்ட திட்டங்களை வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு நான் முற்றிலும் உடைந்து போயிருந்தேன், அந்த வலியை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன். நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு என்னால் என் படுக்கையை விட்டு நகரக்கூட முடியவில்லை. என்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
நான் ஒருவிதமான முடக்க நிலையில் இருந்தேன். நான் மகிழ்ச்சியாக இல்லை, அதை என் நடத்தையிலும் வெளிப்படுத்தினேன். எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நான் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொண்டேன். எனக்கு நானே உண்மையாக இருந்தேன்.
அந்த உணர்ச்சிகளுடன் நான் போராடவில்லை, அதேசமயம் நான் நம்பிக்கையுடன் இருப்பது போலவும் நடிக்கவில்லை. அந்த உண்மையை நான் ஏற்றுக்கொண்டவுடன், என்னால் ஓரளவு விரைவாக மீண்டு வர முடிந்தது. ஜிம்பாப்வே போட்டிக்கு முன்பாக நான் கவுதம் கம்பீரை உடற்பயிற்சி கூடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘சஞ்சு, தயாராக இரு, அடுத்த போட்டியில் நீ விளையாடப் போகிறாய்’ என்று கூறினார்.
அப்போது என் மனதுக்குள், ‘இப்போது செயலில் காட்டுவோம். இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்’ என்று சொல்லிக்கொண்டேன். அணியில் உள்ள எனது சக வீரர்களுடன் போட்டியிடுவதை நான் விரும்புவதில்லை. நாங்கள் அனைவரும் ஒரு பொதுவான இலக்கிற்காக இணைந்து போராடும்போதுதான், என்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.
நியூஸிலாந்து தொடரின் போது, ‘நான் அணியில் இருப்பேனா இல்லையா?’ என்பது பற்றியே என் சிந்தனை இருந்தது. அணியில் இடத்திற்காகப் போராடும்போது நான் ஒருபோதும் சிறப்பாக விளையாடுவதில்லை.
ஆனால் வாய்ப்பு கிடைத்தபோது, நாங்கள் அனைவரும் உலகக்கோப்பை என்ற ஒரே இலக்கிற்காக இணைந்து போராடினோம். இறுதியில் எல்லாம் சுபமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.
ஐசிசி அணியில் 4 இந்திய வீரர்கள்
ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சிறந்த அணியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), ஜேசன் ஹோல்டர் (மே.இ.தீவுகள்), லுங்கி நிகிடி (தென் ஆப்பிரிக்கா), ஆதில் ரஷித் (இங்கிலாந்து), முசரபானி (ஜிம்பாப்வே), ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா).














