இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விஐபி மாடத்திலிருந்து ண்டுகளித்தார். போட்டி முடிந்து இந்திய அணி கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே, தோனி ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார்.
அதில், “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரைக் குறிப்பிட்டு, “பயிற்சியாளர் சார், உங்கள் முகத்தில் புன்னகை அற்புதமாக இருக்கிறது. தீவிரமான முகபாவனையுடன் கூடிய இந்த புன்னகை ஒரு கில்லர் காம்போ போன்று இருக்கிறது. புன்னகைக்க என்ன ஒரு அற்புதமான காரணம்.
உங்களை இப்படி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகச் சிறப்பான செயல்பாடு. வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். பும்ரா பற்றி நான் எதையும் எழுதாமல் இருப்பதே நல்லது. அவர், ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்” என தெரிவித்துள்ளார்.
தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி வாகை சூடிய 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கவுதம் கம்பீர் முக்கிய பங்கு வகித்திருந்தார். வீரராகவும் சரி, பயிற்சியாளராகம் சரி கவுதம் கம்பீர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தது இல்லை.
இதை குறிப்பிட்டே தோனி இந்த பதிவை வெளியிட்டு இருந்தார். கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் தோனி ஒரு பதிவு போட்டு இருந்தார். இதன் பின்னர் 2 வருடங்களாக சமூக வலைத்தளங்களில் அமைதியாக இருந்த அவர், நேற்று முன்தினம் பதிவை வெளியிட்ட உடன் அதை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்தனர்.














