இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. தனது 8-வது சதத்தை விளாசிய கேப்டன் அலிசா ஹீலி 98 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 27 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் குவித்தார்.
பெத் மூனி 84 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசினார். 410 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஸ்னே ராணா 44, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42, தீப்தி சர்மா 29, பிரதிகா ராவல் 27, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 25, ரிச்சா கோஷ் 18 ரன்கள் சேர்த்தனர். ஸ்மிருதி மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அலனா கிங் 4, ஜார்ஜியா வார்ஹாம் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆட்ட நாயகியாக அலிசா ஹீலி தேர்வானார்.














