‘ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேலும், ‘எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செயலாளர் அலி சம்கானி, ஈரான் ராணுவ கமாண்டர் முகமது பக்போர் ஆகியோர் இறந்தனர்.
இந்த தாக்குதலில் அயத்துல்லா அலி காமேனியின் மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் இறந்தனர். இதேபோல் ஈரானின் இஸ்ஃபாகன் மற்றும் சிராஸ் ஆகிய முக்கிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்
டொமஹாக் ஏவுகணை
இது அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் தொலை தூர ஏவுகணை. போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இவற்றை ஏவ முடியும். 30 முதல் 35 என்ற குறைந்த உயரத்தில் இது பறக்கும்போது, எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காது.
5.6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1,600 கிலோ எடை உடையது. மணிக்கு 880 கி.மீ வேகத்தில் சென்று 1,600 கி.மீ தூரத்துக்கும் அப்பால் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தவை.
எப்-35ஐ ‘அடிர்’
இது இஸ்ரேல் தொழில்நுட்பங்கள் சிலவற்றுடன் மேம்படுத்தப்பட்ட போர் விமானம். ரேடாரில்சிக்காத இந்த விமானங்கள் மூலம் இஸ்ரேல் பைலட்டுகள் ஈரானுக்குள் நேற்று முன்தினம் ஊடுருவி துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளனர். இவை தவிர எப்-15து ராம், எப்-15இ ரக போர் விமானங்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி ஈரானில் குண்டுகளை வீசியுள்ளது.
டெலிலா, ரேம்பேஜ் ஏவுகணை
இது இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தும் தொலை தூர ஏவுகணைகள். இவையும் துல்லிய தாக்குதல் நடத்தும் திறனுடையவை.
ஸ்பைஸ் குண்டு
ஈரான் மீதான தாக்குதலில் ஸ்பைஸ், ஜேடிஏஎம் நிறுவன குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் போர் விமானங் களில் எடுத்துச் செல்லப்பட்டு ஈரானில் வீசப்பட்டன.
ஜிபியு-28
ஜிபியு-28 என்ற லேசர் குண்டு 2,268 கிலோ எடையுள்ளது. இது பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களை தகர்க்கும் திறன் வாய்ந்தது.
ஹெராஜ் மற்றும் எய்டன்
இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள தொலைதூர ட்ரோன்கள். இவையும் ஈரானில் துல்லிய தாக்குதல் நடத்தின.
ஈரான் பதிலடி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்கு தலையடுத்து இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவம் முகாம்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஹாகப், ராட், யா-அலி, கியாம், சோமர், இமாத், கொராம்சார், செஜ்ஜில் ஆகிய ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியது. இவைகள் தொலைதூர, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் ஆகும். ஏவுகணைகள் தவிர ட்ரோன்கள் மூலமும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.














