பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதலே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற சில தீவிரவாத தாக்குதல்களுக்கு தலிபான்கள்தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் அவ்வப்போது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் தற்போது கடந்த ஒரு வாரமாக இரு தரப்பின் எல்லையில் பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆப்கனின் காபூல், காந்தகார், பக் ஷியா உட்பட பல நகரங்கள் மீது பாகிஸ்தான் நேற்றுமுன்தினம் இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 274 தலிபான்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக ஆப்கன் ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாகவும், அந்த நாட்டின் பல்வேறு ராணுவ நிலைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ஆப்கனின் நங்கர்ஹார், பக்திகா ஆகிய மாகாணங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள் உட்பட 13 பேர் இறந்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘‘எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது. இப்போது ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்ற நிலைக்கு வந்துவிட்டது. இந்தியாவுடன் கைகோத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் தலிபான்கள் செயல்படுகின்றனர். உலகில் உள்ள தீவிரவாதிகளை எல்லாம் ஆப்கனில் சேர்த்து, தற்போது தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்கிறார்கள். நாங்கள் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக இருக்கிறோம். எங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும். இனிமேல் அந்நாட்டின் மீது பகிரங்க போர்தான் நடத்தப்படும்’’ என்று கூறினார். இதனால் இருநாட்டு எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய போது, அதை அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றார். ஆனால், அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் அதிகரித்தது. தற்போதைய மோதலுக்கு தலிபான்களின் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புதான் காரணம், அத்துடன் பலுசிஸ்தானில் தனி நாடு கோரி போராடுபவர்களுக்கு ஆப்கன் அடைக்கலம் கொடுக்கிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தலிபான்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
எனினும், பாகிஸ்தானில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களில் தலிபான்களுக்கு தொடர்புள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக ராணுவம் மற்றும் போலீஸார் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு ஸ்வாத் பள்ளத்தாக்கில் மலாலா மீது தாக்குதல் நடத்தியதும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்புதான் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.














