ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பவர் ஹிட்டர்கள் நிறைந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து இருந்தது. மறுபுறம் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை அதிக அளவிலான பவர்-ஹிட்டர்களை கொண்டது. முதல் பந்தில் இருந்து தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட இவர்கள், ஆட்டத்தின் எந்த ஒரு கட்டத்திலும் போட்டியின் முடிவை மாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு பலமானதாக உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.
நடப்பு தொடரில் மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய பிரதான பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க அணியானது எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகிறது. கார்பின் போஷ், எய்டன் மார்க்ரம் ஆகியோரும் பந்துவீச்சில் கைகொடுத்து வருகின்றனர்.
பேட்டிங்கில் டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. ஆனால் டேவிட் மில்லர் தனது அனுபவத்தால் அற்புதமாக செயல்பட்டு 35 பந்துகளில் 63 ரன்களை விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய பிரேவிஸ் 45 ரன்களும், இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்களும் விளாசினர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர் சிறந்த பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2 அரை சதங்களுடன் 219 ரன்கள் சேர்த்துள்ள ஷிம்ரன் ஹெட்மயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். கேப்டன் ஷாய் ஹோப், ரோவ்மன் பவல், பிரண்டன் கிங், ரோமாரியோ ஷெப்பர்டு, ஷெர்பேன் ரூதர்போர்டு ஆகியோரும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
அகமதாபாத் சாதகம்
நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தனது பெரும்பாலான ஆட்டங்களை அகமதாபாத் நரேந்திர மோடிமைதானத்திலேயே விளையாடி உள்ளது. இங்கு அந்த அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் சுற்றின் ஒரு ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தியது. இதனால் அந்த அணி ஆடுகளத்தின் தன்மையை நன்கு தகவமைத்துக் கொண்டு அதற்கு தகுந்தபடி சிறப்பாக விளையாடி வருகிறது. இது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆடுகளம் எப்படி?
இன்றைய போட்டி பிற்பகலில் நடைபெறுவதால் ஆடுகளத்தின் மேற்பரப்பு சற்று வறண்டதாக இருக்கக்கூடும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நேரம் செல்லச் செல்ல ஆடுகளத்தின் தன்மை மந்தமாக மாறினால் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்.
காத்திருக்கும் இந்திய அணி?
தென் ஆப்பிரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் மோதும் ஆட்டத்தின் முடிவு இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கலாகக்கூடும்.














