சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, 7 நாட்களில் அதை இடிக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கடந்த ஆண்டு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தரப்பில் ஜெயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தங்களது தரப்பில் விளக்கம் அளிக்க எந்தவொரு கால அவகாசமும் அளிக்காமல், கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தாமல், நேரடியாக கோயிலை இடிக்க வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்,வருவாய் ஆணையரின் பரிந்துரைப்படி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட கோயில் சாலையை ஆக்கிரமித்து உள்ளதாக குறிப்பிட்டு எந்த களஆய்வும் நடத்தாமல் நேரடியாக கோயிலை 7 நாட்களுக்குள் இடிக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல.
சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க, விளக்கமளிக்க போதிய அவகாசம் வழங்கும் வகையில் விளக்கம் கோரும் நோட்டீஸ் பிறப் பித்து, அதன்பிறகே இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட கோயில் சாலையோர ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை மண்டல அளவிலான கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விளக்கமளிக்க வாய்ப்பளித்து, சட்டப்பூர்வமாக நோட்டீஸ் பிறப்பித்து, அதன்பிறகே கோயிலை இடிப்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கோயிலை இடிக்க பிறப்பி்க்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.













