அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள் குறித்து ஏபிசி நியூஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை இப்சோஸ் நிறுவனத்தின் அறிவுத்திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்தியது.
அமெரிக்காவின் பண வீக்கம், மற்ற நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதி வரி, வெளிநாட்டு உறவுகள் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இந்த கருத்துக்கணிப்பு அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுகளின் முடிவில் பெரும்பாலான மக்கள் அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் பேர் ட்ரம்ப்பின் கொள்கைகளை விரும்பவில்லை. இந்த ஆய்வானது, அதிபர் விதித்த வெளிநாட்டு பொருட்கள் மீதான வரியை, அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்வதற்கு சற்று முன்பாக நடத்தப்பட்டது.
அதிபர் ட்ரம்ப், பண வீக்கத்தைக் கையாளும் விதத்தை 3 அமெரிக்கர்களில் 2 பேர் ஏற்கவில்லை. 10 பேரில் ஆறு பேர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் விவகாரத்தில் அவர் கையாளும் விதத்தையும் விரும்பவில்லை.
குடியேற்றம் தொடர்பான ட்ரம்ப்பின் கொள்கைகளை 58 சதவீத மக்கள் எதிர்த்துள்ளனர். அதேபோல் 57% பேர் ஒட்டுமொத்தமாக பொருளாதாரக் கொள்கைகள் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் கையாளும் விதத்தையும் ஏற்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளிநாட்டு உறவுகள் விவகாரத்தில் அவர் கையாளும் விதத்தை 62% பேர் ஏற்கவில்லை. அதேபோல், நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க யாரை அதிகம் நம்புகிறார்கள் என்று கேட்டபோது, பொதுமக்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று 33% பேரும், ஜனநாயகக் கட்சி என்று 31% பேரும், ‘இரண்டு பேருமே இல்லை’ என்று 31% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, அமெரிக்க மக்கள் இரு தரப்பினரிடமும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது தெரிகிறது. மேலும், பத்து அமெரிக்கர்களில் ஏழு பேர் அதிபர் ட்ரம்ப் நேர்மையானவர் அல்லது நம்பகமானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இதில் பலர் டரம்ப் தனது அதிபர் பதவியை சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.














