பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியின் சுவரில் மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு சிறுமி கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் அருகில் இருந்த குடியிருப்புகளையும் கடுமையாக சேதப்படுத்தியது. அத்துடன் 7 பேர் காயமடைந்தனர். இதுபோல பன்னு நகரில் உள்ள மிரியன் காவல் நிலையம் அருகே ரிக்சாவில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
மேலும் ஷாங்லா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது நடந்த மோதலில் 3 போலீஸார் மற்றும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சீனர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.














