கப்புள் ஃபிரெண்ட்லி: திரைப் பார்வை – காதலை கவுரவம் செய்யும் காமம்!

0
29

தெலுங்கு மாஸ் மசாலா படங்கள் மீது தமிழ்ப் பார்வையாளர்களுக்கு எப்போதும் பெரிய மரியாதை இருந்ததில்லை. மாறாக, எஸ்.எஸ்.ராஜமௌலியின் படங்கள், ‘புஷ்பா’ போன்ற நேர்த்தியான மசாலா படங்களை இங்கே ஓட வைப்பார்கள். தமிழ் மசாலா படங்கள் மீதான இதே பார்வை மற்ற மூன்று மாநில ரசிகர்களுக்கு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. பிறகு தென்னிந்திய வெகுஜன சினிமாவின் தரத்தை எந்த மாதிரியான படங்கள் உயர்த்தும் என்று தேடினால், அவைதான் மிடில் சினிமாக்கள். மசாலா குப்பைகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகின் மீது மரியாதையை உருவாக்கும் படங்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது ‘கப்புள் ஃபிரெண்ட்லி’.

‘தெரியாமல் கைப்பட்டுவிட்டால் கூட அனிச்ச மலரானது அந்த நொடியே வாடிவிடும். அந்த அனிச்ச மலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது; அதன் தன்மை அறிந்து, அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள், உலகத்தில் சிலர் தான்’ என்று 1289-வது குறள் வழியாகச் சொல்லிச் சென்றார் திருவள்ளுவர்.

ஆனால், இந்திய சினிமாவில் பாலியல் விளைவும் அதன் நீட்சியான காமத்தில் தனியும் கதாபாத்திரங்களைப் பெரும்பாலும் மிக மலிவாகவே சித்தரித்து வந்திருக்கிறார்கள். முதல் முறையாக ஒரு இந்திய சினிமாவில், திருமணத்துக்கு முந்தைய பாலியல் விளைவையும் அது உடலுறவில் முடிவதையும், உடலளவில் கலந்த பிறகு காதல் மேலும் உறுதிப்படுவதையும் காதலின் ஓர் இயல்பான பரிமாணமாகச் சித்தரித்திருக்கிறார் ‘கப்புள் ஃபிரெண்ட்லி’ படத்தின் இயக்குநர்.

உலகமயமாதலின் விளைவாக, மேற்கத்திய ’டேட்டிங்’ கலாச்சாரத்தை வெகுவாக இறக்குமதி செய்துவரும் இந்தியச் சமூகத்தில், திருமணத்துக்கு முந்தைய பாலுறவு என்பது என்பது ‘ஜஸ்ட் லைக் தட்’ என மாறிக்கொண்டு வருவதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், ‘கப்பிள் ஃபிரெண்ட்லி’ படத்தில் நிகழ்வது ‘டேட்டிங்’ அல்ல. ஒரு பெண், தனக்கு உதவும் ஆணின் வெளிப்படையான, போலித்தனமற்ற நேர்மையான நடத்தையால், அவனது திறமையால் ஈர்க்கப்படுகிறாள். திறமையிருக்கும் அதை மேடையேற்ற வாய்ப்பின்றி அல்லாடுவதைக் கவனிக்கிறாள். அவனது தன்னம்பிக்கையை அவனுக்கே கண்டுபிடித்துக் கொடுக்கிறாள்.

அவனோ அவளது தன்னம்பிக்கையின், பொதுச் சமூகத்தில் வாய் திறந்து பேசும் அவளின் நேர்த்தியான அணுகுமுறையைக் கண்டு தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறான். கையிலிருக்கும் பணத்தின் அளவும் அதை ஈட்டுவதற்கான போராட்டமும் சென்னை மாநகரில் இந்த இருவரின் இருத்தலியல் பிரச்சினையாக மாறும்போது, அவர்கள் ஒரே இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டு, பொருளாதாரப் பிரச்சினையைத் தற்காலிகமாகச் சமாளிக்கிறார்கள்.

அந்தப் பரஸ்பர உதவியும் அருகாமையும் அவர்கள் இருவரது இடையிலான கண்ணியத்தை வளர்க்கிறது; கூடவே காதலையும். காதலைப் பரிமாறிக்கொள்ளாமலேயே மனம் நிறையக் காதலையும் ஒருவர் மீது மற்றொருவர் வளர்த்துக்கொள்ளும் நன்றி கலந்த அக்கறையும் அவர்களை நெருங்க வைக்கிறது. அது ஒருநாள் உடலுறவில் முடிகிறது.

அது வெறும் உடல்களின் நெருக்கத்தில் விளையும் வெளிப்பாடாக அல்ல, உறவின் இயல்பான பரிணாமமாக படத்தில் கையாளப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், அது பார்வையாளரைப் பாலியல் இச்சைக்குத் தூண்டும் காட்சியால் அல்ல, ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக உணர்ந்து நம்பும் காதலின் முதிர்ச்சியில் அங்கே காமம் தன்னை அடக்கமாக அரங்கேற்றிக்கொள்கிறது.

அந்தக் காட்சியை எவ்வித ஆபாசமான அசைவுகளும் இல்லாமல் ஆனால் நெருக்கமான காட்சியாகத் துணிந்து சித்தரித்திருக்கிறார் இயக்குநர். உடல் மொழி, பார்வைகள் இவையே காதலைப் பரஸ்பரம் கூறிக்கொள்ளும் அற்புதமான மொழியாகக் காமம் தன்னை மரியாதைக்குரிய மேடையில் அமர்த்திக்கொள்கிறது.

இன்னும் விரித்துக் கூறுவதென்றால், இயக்குநர், உடலுறவை ஓர் எதிர்பாராத விபத்து ‘ சென்சேஷனைலைஸ்’ செய்யாமல், உறவில் உறுதிப்பட்ட நம்பிக்கை வளர்ச்சியின் முக்கிய கட்டமாக, இயல்பாகக் கவியும் உணர்வாகச் சித்தரித்திருக்கிறார். திடீர் வெடிப்பாக அல்லாமல்; காதலின் நீட்சியாக, பரஸ்பர விருப்பத்துடன், வாழ்வில் இணையும் ஒப்பந்தத்தின் பரிமாண அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் காட்சிகளில் மிகை இல்லை; மென்மை மற்றும் மரியாதை மிகுந்த முயக்கத்துடன் அக்காட்சியைச் சித்தரிக்கிறார்.

இந்த நெருக்கம் பின்னர் கதையின் மைய மோதலுடன் இணையும் போது, காமம் வெறும் உடல் தேவையல்ல; பொறுப்பு, எதிர்காலம், குடும்பம் போன்ற பெரிய பொறுப்புக்களோடு தொடர்புகொள்ளும் உணர்வாக மாறுகிறது. இதுவே படத்துக்கும் இரண்டாம் பாதியின் எதிர்பாராத திருப்பத்துக்கும் முதிர்ச்சியான ’லேய’ரை வழங்கிவிடுகிறது. காமத்தைத் தூய காதலின் மண ஒப்பந்தமாகச் சித்தரித்துள்ள இக்காட்சிக்காக இந்திய சினிமா 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்துள்ளது. இந்த ஒரு காரணத்துக்காகவே ‘கப்புள் ஃபிரெண்ட்லி’ படத்தை இன்றை 18+ வயதினர் காணத் தகுதியான படம் இது. சரி.. இனி படத்தின் பொதுவான மதிப்பீட்டுக்குள் நுழைவோம் வாருங்கள்..

நெல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சிவா (சந்தோஷ் ஷோபன்), சென்னை தனது கனவுகளை வென்றுகொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் இண்டிரியர் டிசைன் துறையில் முதல் வாய்ப்புக்காக அலைந்து திரிகிறான். இன்னொரு பக்கம், சித்தூரைச் சேர்ந்த மித்ரா (மானசா வாரணாசி) ஆஃபர் லெட்டர் கிடைத்தும் வேலையில் இணைய அழைக்கப்படாததால் சென்னையின் பீஜி விடுதியில் காத்துக்கிடந்து நாள்களைக் கடத்துகிறாள். அவள் சித்தூர் திரும்பாமல் போக்குக்குக் காட்டுவதற்கு அவளது பெற்றோர் தரும் திருமண அழுத்தமும் ஒரு காரணம்.

சொந்தக் காலில் நிற்க விரும்பும் இந்த இருவரும் அறை நண்பர்களாக மாறும் சூழலை சென்னையின் நாள்கள் அவர்களுக்கு வழங்குகின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு, பரஸ்பரம் நம்பிக்கையைப் பெறும்போது கனவை வென்றுவிட முடியும் என்கிற உறுதியைப் பெறுகிறார்கள். இந்தக் கனவுப் போராட்டத்துக்கு நடுவே அவர்கள் இருவருக்கு இடையிலான மனதின் இடைவெளிகள் குறைந்துகொண்டே வருவதையும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடன் பட்டுள்ளதையும் கச்சிதமும் சிக்கனமும் மிகுந்த தருணங்களின் வழியாக நம்மை ஆக்கிரமித்துக்கொள்ளும்போது அவர்கள் ஒன்று கலந்துவிடுகிறார்கள். அதன்பிறகு வரும் வாழ்க்கையின் எதிர்பாரா தருணங்கள் அவர்களை எப்படிப்பட்ட வாழ்க்கைக்கு நடத்திச் சென்றது என்பதுதான் கதை.

சமூகத்தின் கலாச்சார வேலிகளைச் சட்டை செய்யாத இந்த இருவரது ‘லிவ் இன்’ உறவின் ஏற்ற இறக்கங்கள், தன்முனைப்பு எட்டிப்பார்க்கும் மெல்லிய மோதல்கள் ஆகியவற்றை இயல்பாக, நம்பகமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். மித்ரா ‘லிவ் இன்’ உறவை ஏற்கலாம் என்கிற துணிவுக்கான உந்துதலை, அவளுடைய தோழி, தன்னைவிட மூத்த ஆணுடன் ‘லிவ் இன்’ வாழ்க்கையில் இருப்பதும் கொடுக்கிறது என எண்ண வைக்கிறார். அந்த ஜோடியைத் திரைக்கதையில் இணைத்தவிதம் இயல்பாகவே வந்துபோகிறது.

இரண்டாம் பாதியில் இருவரது பெற்றோரையும் எதிர்கொள்ளும்போது வரும் மெலோடிராமா தருணங்கள், அதைத் தொடர்ந்து இருவரும் குடும்ப வாழ்க்கையில் இணைத்துவிடுவார்கள் என எண்ணும்போது வரும் திருப்பம் படத்தின் வண்ணத்தை மொத்தமாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. பெற்றோர் வரும் காட்சிகளைத் தவிர, ஏனைய அனைத்துக் காட்சிகளிலும் அறிமுக இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் தன்னை முதிர்ச்சியான இயக்குநராக அடையாளம் காட்டிச் செல்கிறார்.

சிவா – மித்ரா போன்ற நம்பிக்கைகள் நிறைந்த நவீன இளைஞர்களின் நகரமாக, கட்டிடங்கள் நிறைந்த நெருக்கடியான நகரமாக மாறிக்கொண்டிருந்தாலும், ஆனால் கனவுகளின் நிலமாகச் சென்னையைக் காட்சிப்படுத்தியிருப்பது அதை நோக்கி நம்பிப் போகலாம் என்கிற ஈர்ப்பை உருவாக்கிவிடுகிறது தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு. சென்னையில் நிகழும் கதையைக் கொண்ட ஒரு தெலுங்குப் படத்தை, அது மொழிமாற்றுப் படம் என்றே தெரியாதவாறு அவ்வளவு கச்சிதமாக ‘டப்’ செய்திருப்பது படக்குழுவின் அபார ஈடுபாட்டுக்குச் சான்று.

முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ள இருவருமே அற்புதமான ‘கெமிஸ்ட்ரி’யை நடிப்பின் வழியாக எட்டிப்பிடித்து நம்மைக் கதாபாத்திரமாக நம்ப வைத்துவிடுகிறார்கள். இவர்களோடு துணைக் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்களின் பங்களிப்பும், யோகிபாபு, லிவிங்ஷ்டன் போன்ற தமிழ் நடிகர்களின் இணைவும் தமிழில் உருவான ஒரு முதல் தரமான மிடில் சினிமா பார்க்கும் திரை அனுபவத்தைக் கொடுத்துவிடுகிறது.

படத்தின் முதல் பாதியில் ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் சாயலைச் சில காட்சிகள் நினைவூட்டினாலும் எதிர்பாராத சூழலில் கனவுகளைத் துரத்தும் இருவர் ஒருவருக்கொருவர் துணையாக மாறுவதும்; அவர்களிடையே முகிழ்க்கும் காதல் வெற்றுப் பிரகடமான இல்லாமல், அன்றாடத் தருணங்களின் பரஸ்பர நம்பிக்கையின் வழியாக முகிழ்ப்பது ‘காகபோ’ படம் தந்த திரை அனுபவப் பகிர்வை ‘கப்புள் ஃபிரெண்ட்லி’ பல காட்சிகளில் மீட்டெடுக்கிறது. என்றாலும் கதையின் மையச் சிக்கலைக் கையாண்டதில் கவிந்திருக்கும் படைப்பு நேர்மைதான் இந்தப் படத்தை முதிர்ச்சியும் அதிர்ச்சியும் மிகுந்த காதல் கதையாக மாற்றிவிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here