நாடாளுமன்ற தேர்தலில் பிஎன்பி கட்சி வெற்றி: வங்கதேச பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

0
12

வங்​கதேசத் தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி(பிஎன்​பி) கூட்​டணி வெற்றி பெற்றுள்ளது.

வங்​கதேசத்​தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் பொதுத்​தேர்​தல் நடை​பெற்​றது.

இதில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்​களைக் கைப்​பற்​றியது. 300 இடங்​களைக் கொண்ட வங்​கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றுள்​ளது. இதன்​மூலம் சுமார் 17 ஆண்​டு​கள் கழித்து வங்​கதேசத்​தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்​ளது. தாரிக் ரஹ்​மான் வங்​கதேச பிரதம​ராக தேர்வு செய்​யப்​பட உள்ளார்.

தாரிக் ரஹ்​மானின் தந்தை ஜியா​வுர் ரஹ்​மான் ராணுவ அதி​காரி​யாக இருந்​து, பின்​னர் பிஎன்பி கட்​சியை தொடங்கி 1977-ல் வங்​கதேச அதிப​ராக பொறுப்​பேற்​றார். 1981-ல் அவர் சுட்​டுக் கொல்​லப்​படும் வரை அந்த பதவி​யில் இருந்​தார். பின்னர் அவரது மனைவி கலிதா ஜியா வங்​கதேச பிரதம​ராக​வும் பிஎன்பி கட்​சித் தலை​வ​ராக​வும் பொறுப்​பேற்​றார். 1991 முதல் 1996 வரை​யும் மற்​றும் 2001 முதல் 2006 வரை​யும் கலிதா ஜியா பிரதம​ராக இருந்த கால​கட்​டத்​தில் மகன் தாரிக் ரஹ்​மான் நிர்​வாகத்​தில் முக்​கிய பங்கு வகித்​தார். முக்​கிய முடிவு​கள் அனைத்​தை​யும் அவரே எடுப்​ப​தால்​தான் நிழல் பிரதமர் என்று பொருள்​படும் வகை​யில் அவரை அந்​நாட்டு எதிர்க்​கட்​சிகள் ‘டார்க் பிரின்​ஸ்’ என்று அழைத்​தன.

2007-ல் ராணுவ புரட்சி ஏற்​பட்டு இடைக்​கால அரசு பொறுப்​பேற்​ற​போது ஊழல், பண மோசடி மற்​றும் ஷேக் ஹசீ​னாவை கொலை செய்ய முயற்சி உள்​ளிட்ட பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களின் கீழ் தாரிக் ரஹ்​மான் கைது செய்​யப்​பட்​டார். 17 மாதங்​கள் சிறை​யில் இருந்த தாரிக் ரஹ்​மான் மருத்​து​வக் காரணங்​களுக்​காக ஜாமீன் பெற்​று, சிகிச்​சைக்​காக பிரிட்​டன் சென்​றார். பிரிட்​டனிலேயே தஞ்​சம் அடைந்து லண்​டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​கள் கழித்து கடந்த ஆண்டு டிசம்​பரில் அவரது தாய் கலிதா ஜியா உயி​ரிழந்​த​போது வங்​கதேசம் திரும்​பி​னார்.

தாயின் மறைவுக்​குப் பின் பிஎன்பி கட்​சித் தலை​வ​ராக பொறுப்​பேற்ற ரஹ்​மான் மூன்று மாதங்​களில் அக்​கட்​சியை வெற்​றியை நோக்கி அழைத்​துச் சென்று ஆட்​சி, அதி​காரத்​தில் அமர உள்​ளார். ஷேக் ஹசீனா ஆட்​சிக் காலத்​தில் அவர் மீது சுமத்​தப்​பட்ட அனைத்து ஊழல் மற்​றும் கிரிமினல் வழக்​கு​களில் இருந்​தும் அவர் தற்​போது விடுவிக்​கப்​பட்​டுள்​ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து: தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள தாரிக் ரஹ்​மானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here