க்ளோஸ்​-அப்: மனதைத் தொடும் உத்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல 19

0
24

சினி​மா​வில், பார்​வை​யாளரின் இதயத்​தோடு நேரடி​யாக இணைக்​கும் பாலம் ‘க்​ளோஸ்​-அப்’ ஷாட்​டு​கள். பிரம்​மாண்ட திரை​யில், ஒரு மனித முகம் மட்​டும் ஆக்​கிரமித்​திருக்​கும் அந்த சில நொடிகள், ஆயிரம் பக்கவசனங்​கள் சொல்​லாத உண்​மை​களைச் சொல்​லி​விடும். இது பார்​வை​யாளரை கதா​பாத்​திரத்​தின் அகவுல​கத்​துக்​குள் அழைத்​துச் செல்​லும் உணர்ச்​சிப் பாலம்.

க்ளோஸ்​-அப்​பின் வரையறை: சூழலில் இருந்து மனநிலைக்கு: தொழில்​நுட்ப ரீதி​யாக, தோள்​பட்​டைக்கு மேல் முகம் மட்​டும் தெரி​யும் காட்​சியே க்ளோஸ்​-அப் எனப்​படும். ஆனால், கலைரீதி​யாக இது ‘சூழலைத் துண்​டித்து உணர்வை இணைக்​கும்’ உத்​தி. வைடு ஷாட்​கள் ஒரு கதை​யின் ‘புறச்​சூழலை’ விளக்​கி​னால், க்ளோஸ்​-அப்​கள் கதை​யின் ‘அகச்​சூழலை’ விவரிக்​கிறது. இங்கே உணர்வே பிர​தான​மாகிறது.

வகைகள் மற்​றும் அவற்​றின் உளவியல் தாக்​கம்: க்ளோஸ்​-அப் காட்சி எடுக்​கும் தூரத்​தைப் பொறுத்து அதன் வீரிய​மும் மாறு​படு​கிறது: மித​மான நெருக்​கம் (மீடி​யம் க்ளோசப்): இது கதா​பாத்​திரத்​தின் நெஞ்​சுப்​பகுதி வரை காட்​டும். இதில் முக​பாவனையோடு சேர்த்து தோள்​களின் அசை​வும் சேர்ந்து கதையைச் சொல்​லும்.

சோக்​கர் க்ளோஸ்-அப்: கதா​பாத்​திரத்​தின் நெற்றி முதல் தாடை வரை மட்​டுமே காட்சி வைக்​கப்​பட்​டிருக்​கும். இது ஒரு​வித​மான மூச்​சுத்​திணறலை அல்​லது அழுத்​தத்தை உரு​வாக்​கப் பயன்​படும்.

அபோகலிப்ஸ் நவ்

கவ்​பாய் தீர்​வு: மேற்​குல​கப் படங்​களில் கவ்​பாய் தொப்​பிகளின் விளிம்​பு, முகத்​தில் நிழலை உண்​டாக்​கு​வதைத் தவிர்க்​க​வும், வழுக்​கைத் தலைகளின் கவனச் சிதறலை நீக்​க​வும் இது பயன்​பட்​டாலும், இதன் உண்​மை​யான நோக்​கம் கண்​களின் மொழியைத் துல்​லிய​மாகப் படம்​பிடிப்​பதே ஆகும்.

எக்​ஸ்ட்​ரீம் க்ளோஸ்​-அப்: ஒரே ஒரு கண், ஒரு சொட்டு வியர்​வை, அல்​லது நடுங்​கும் விரல் போன்ற மிகச்​சிறிய விவரங்​கள் காட்​சிப்​படுத்​தப்​படு​வது. ஒரு துப்​பாக்​கி​யின் ‘ட்​ரிக்​கர்’ மீது இருக்​கும் விரலை எக்​ஸ்ட்​ரீம் க்ளோஸ்​-அப்​பில் காட்​டும்​போது அந்த ஒரு நொடி, காட்​சியை உறைய வைக்​கும்.

காட்சி நகர்​வின் மாயம்: க்ளோஸ்​-அப்/ நீண்ட காட்சி: சினி​மா​வில் ஒரு காட்​சி​யின் அதிர்வு என்பது ஷாட்​டு​களின் வரிசை​யிலேயே உள்​ளது. நீண்ட காட்​சியி​லிருந்து க்ளோஸ்​-அப்:

கதை உலகம் ‘கதை மனம்’ ஆக மாறுகிறது. ஒரு பெரிய கூட்​டத்​தில் இருக்​கும் ஒரு​வனின் தனிப்​பட்ட பயத்தை இது காட்​டும்.

க்ளோஸ்​-அப்​பிலிருந்து நீண்ட காட்​சி: இது ஓர் ஆச்​சரிய உத்​தி. ஒரு முகத்​தின் தீவிர​மான உணர்வை மட்​டும் காட்​டி​விட்​டு, திடீரென கேமரா பின்​னோக்​கிச் செல்​லும்​போது அந்த கதா​பாத்​திரம் எங்கே இருக்​கிறது என்ற உண்மை தெரிய​வரும்.

உதா​ரண​மாக, ஒரு​வன் சோக​மாக இருப்​ப​தாகக் காட்​டி​விட்​டு, லாங் ஷாட்​டில் அவன் ஒரு மயானத்​தில் நிற்​ப​தைக் காட்​டும்​போது, அந்​தச் சூழலின் துக்​க​மும், தனிமை​யும் பார்​வை​யாளரை அதிரச் செய்​யும்.

ஒளியமைப்​பின் மாயாஜாலம்: க்ளோஸ்​-அப் காட்​சிகளில் ஒளி என்​பது கதா​பாத்​திரத்​தின் மனசாட்​சி. கண்​ணின் கரு​விழிக்​குள் தெரி​யும் ஒரு சிறு ஒளிப்​புள்​ளி. இது அந்​தக் கதா​பாத்​திரம் ‘உயிர்ப்​புடன்’ இருப்​பதை உறுதி செய்​யும் கேட்ச் லைட். ஒரு துக்​க​மான காட்​சி​யில் இந்த ஒளிப்​புள்​ளியை மட்​டும் நீக்​கி​விட்​டால், கதா​பாத்​திரம் நம்​பிக்​கை​யிழந்து போனதைப் போன்ற உணர்​வைத் தரும்.

தொழில்​நுட்​பம் மற்​றும் லென்​ஸுகள்: வைடு-ஆங்கிள் க்ளோஸ்​-அப்: முகத்தை நெருக்​க​மாகக் காட்​டும் போதே, பின்​னணி​யில் இருக்​கும் சூழலை​யும் தெளி​வாகக் காட்​டும். இது ஒரே சட்​டகத்​தில் பலரை நெருக்​க​மாக இணைக்க உதவும்.

டெலி-லென்ஸ் க்ளோஸ்​-அப்: பின்​னணியை முழு​மை​யாக மங்​கச் செய்​து, பார்​வை​யாளரின் கவனத்தை சிதற விடா​மல் முகத்தை மட்​டும் ஒரு மென்​மை​யான ஓவி​யம் போலக் காட்​டும்.

மவுனத்​தின் மொழி: இயக்​குநர் ரிச்​சர்ட் அட்​டன்​பரோ​வின் ‘காந்​தி’ படத்​தில் கஸ்​தூரி​பா​யின் மரணச் செய்​தியை காந்தி கேட்​கும் காட்​சி​யில் வசனங்​களே இருக்​காது. அவரது உதடு​கள் லேசாக நடுங்​கு​வது மட்​டுமே காட்​டப்படும். இந்​திய சினி​மா​வில் இயக்​குநர் மணிரத்​னம், க்ளோஸ்​-அப் காட்​சிகளை மிக அழகாகக் கையாளு​வார். ‘தளப​தி’, ‘இரு​வர்’ போன்ற படங்​களில் நிழல்​கள் கலந்த க்ளோஸ்​-அப் காட்​சிகள் கதா​பாத்​திரங்​களின் அந்​தரங்​கப் போராட்​டங்​களை மிகச்​சிறப்​பாகப் பிர​திபலிக்​கும்.

ஒலி​யின் பங்கு: ஒரு க்ளோஸ்​-அப் காட்சி முழு​மையடைய ஒளி மட்​டும் போதாது, ஒலி​யும் தேவை. கேமராமுகத்​துக்கு நெருக்​க​மாக இருக்​கும்​போது, சுற்​றுப்​புறச் சத்​தங்​களைக் குறைத்​து, அந்​தக் கதா​பாத்​திரத்​தின் மூச்​சுக்​காற்று அல்​லது ஆடை உரசுவது போன்ற மெல்​லிய ஒலிகளை மிகைப்​படுத்​திக் காட்​டும்​போது, பார்​வை​யாளர் அந்த ஒலியோடு உணர்​வுப்​பூர்​வ​மாக ஒன்​றிப்​போ​வார்.

அபோகலிப்ஸ் நவ் மற்​றும் தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் ஆகிய இரு திரைப்​படங்​களும் க்ளோஸ்​-அப் ஷாட்​டு​களை பார்​வை​யாளரின் அடிமனதை ஊடுரு​வும் சக்​தி​வாய்ந்த கரு​வி​யாகப் பயன்​படுத்​துகின்றன அபோகலிப்ஸ் நவ் -ல், கர்​னல் கர்ட்ஸ் (மார்​லன் பிராண்​டோ) அறி​முக​மாகும் காட்​சிகள் கியாரஸ்க்​யூரோ லைட்​டிங் மூலம் மிகச் சிறப்​பாக உரு​வாக்​கப்பட்​டுள்​ளன.

முகத்​துக்கு மிக அரு​கில் கேமரா செல்​லும் போது, முகத்​தின் ஒரு பகுதி ஆழ்ந்த இருளில் மறைந்​திருக்க, மறு​பகுதி மெல்​லிய ஒளி​யில் வெளிப்படு​கிறது. இது கர்ட்​ஸின் உள்​ளார்ந்த தார்​மீகக் குழப்​பத்​தை​யும் மனிதனுக்​கும் மிரு​கத்​துக்​கும் இடையே​யான மெல்​லிய கோட்​டை​யும் குறிக்​கிறது.

தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்

இயக்​குநர் ஜோனாதன் டெம்​மின் தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்​ஸ்​-ல் ஹன்​னிபல் லெக்​டெர் (ஆண்​டனி ஹாப்​கின்​ஸ்) பேசும் போது, அவர் கேம​ராவை, அதாவது பார்​வை​யாளரை நேரடி​யாகப் பார்க்​கிறார். இந்த டைரக்ட் டு கேமரா க்ளோஸ்-அப், சினி​மா​வின் வழக்​க​மான விதி​களுக்கு எதி​ரானது.

க்ளேர்​ஸின் இடத்​தில் நம்மை வைத்​து, அவர் நம்​மை​யும் “வேட்​டை​யாடு​வது” போல உணர்த்​துகிறார். இவ்​விரு படங்​களும் க்ளோஸ்​-அப் உத்தியை உளவியல் ஆயுத​மாக மாற்​றுகின்​றன. ஒன்று இருளுக்​குள் இழுக்​கிறது, மற்​றொன்று ஆபத்​தைக் காட்​டு​கிறது.

உலக சினிமா வரலாறு: தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க்​(1928): முகத்​தையே நிலப்​பரப்​பாகப் பயன்​படுத்​திய படம். தி குட், தி பேட் அண்ட் தி அக்​லி: கண்​களின் நெருக்​கக் காட்​சிகள் மூலம் நேரத்​தையே உறைய வைத்​தார் செர்​ஜியோ லியோன்.

பெர்​ஸோ​னா: முகங்​களை ஒன்​றிணைத்து ஓர் உளவியல் அதிர்ச்​சி​யைத் தந்​தார் இங்மர் பெர்க்​மன்.

சட்டக வடிவ​மைப்பு:

க்ளோஸ்​-அப் என்​பது பார்​வை​யின் மாற்​றம். நீண்ட காட்சி ‘எங்கே இருக்​கிறோம்’ என்று சொல்​கிறது; க்ளோஸ்​-அப் காட்சி ‘உள்ளே என்ன நடக்​கிறது’ என்​ப​தைக் காட்​டு​கிறது. இது நடிகரின் நுண்​ணிய நடிப்​பைக் கோரும் களம். அங்கே மிகை நடிப்​புக்கு இடமில்​லை; ஓர் இமை அசைவு கூடத் திரை​யில் மிகப்​பெரிய​தாகத் தெரி​யும். கேம​ரா, மனித மனத்தை ஊடுரு​விப் பார்க்​கும் ஒரு எக்​ஸ்​-ரே கருவி என்​ப​தைக் க்ளோஸ்​-அப் காட்​சிகள் நிரூபிக்​கின்​றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here