பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே இன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மலேசியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மலேசியா சென்டைந்தார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – மலேசியா இடையே தொடர்ந்து சிறப்பான நட்புறவு உள்ளது. அந்த உறவை இன்னும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மலேசியாவுக்கான இந்திய தூதரக அதிகாரி பி.என்.ரெட்டி கூறியதாவது: பிரதமர் மோடி வருகையின்போது இந்தியா – மலேசியா இடையே வர்த்தகம், பொருளாதாரம், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
வழக்கமான துறைகள் மட்டுமின்றி, புதிதாக வேறு எந்த துறைகளில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும்
ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மோடி வருகையை முன்னிட்டு, மலேசியாவில் வாழும் இந்தியர்கள் கோலாலம்பூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் மலேசியாவின் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பிரதமர் மோடியுடன், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமும் இதில் பங்கேற்கிறார்.



