நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்றது குறித்து வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் கடவுள் எழுதியது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரில் சனிக்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நடப்பு சாம்பியனான இந்தியா விளையாடியது. இது இந்த தொடரில் இந்திய அணிக்கு முதல் ஆட்டமாக அமைந்தது. 162 ரன்கள் விரட்டிய அமெரிக்க அணியை 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்தியா. இந்த ஆட்டத்தில் மொத்தம் 3 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றி இருந்தார்.
“நான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேன் என நினைக்கவில்லை. நான் டி20 போட்டிகளில் அணிக்காக விளையாடவில்லை. அதனால் இந்த முறை எனக்கு வாய்ப்பு இல்லை என புரிந்து கொண்டேன்.
இந்த சூழலில் எனக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் போன் செய்தார். ‘உன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பி வா’ என்றார். ‘ஜோக் செய்யாதீர்கள். ஏனெனில் இது நடக்காது’ என நான் அவரிடம் சொன்னேன். அவர், ‘உண்மைதான்’ என்றார். அதற்குள் அடுத்த அழைப்பு வந்தது. அதில் பிரக்யான் ஓஜா அணியில் சேருமாறு உறுதி செய்தார்.
பிப்.15-ம் தேதி ரியல் மாட்ரிட் ஆட்டத்தை பார்ப்பதுதான் என் திட்டம். ஆனால், கடவுள் எழுதியது என்னவோ அதுவே நடக்கும். நான் விமானத்தில் வந்தபோது கூட எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. நான் வந்தேன். விளையாடினேன். இது அனைத்தும் எழுதப்பட்டது.
ரஞ்சி டிராபியில் வீசிய அதே லைன் மற்றும் லெந்தில் பந்து வீச முடிவு செய்தேன். புதிய பந்தில், விக்கெட் டூ விக்கெட் வீசுவதுதான் திட்டம். விக்கெட் வீஸ்த்தினால் அது அணிக்கு உதவும் என எண்ணினேன்” என சிராஜ் தெரிவித்தார்



