ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது.
6-வது ஓவரை வீசிய லாக்கி பெர்குசன், தொடக்க ஜோடியை வெளியேற்றினார். இப்ராகிம் ஸத்ரன் 12 பந்துகளில் 10 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 22 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் எடுத்த நிலையில் லாக்கி பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தனர். பவர்பிளேவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் நடுவரிசையில் குல்பாதின் நயீப் அதிரடியாக விளையாடினார்.
அவர், தனது 4-வது அரை சதத்தை 29 பந்துகளில் விளாசினார். மட்டையை சுழற்றிய குல்பாதின் நயீப் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசிய நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தார்.
செடிக்குல்லா அடல் 24 பந்துகளில், 29 ரன்களும் டார்விஷ்ரசூலி 13 பந்துகளில் 20 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 7 பந்துகளில், 14 ரன்களும், முகமது நபி 7 பந்துகளில், 10 ரன்களும் சேர்க்க 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். மெட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட் செய்தது. ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசிய முதல் ஓவரில் டிம் ஷெய்பர்ட் 3 பவுண்டரிகளை விரட்டினார். ஆனால் முஜீப் உர் ரஹ்மான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் ஃபின் ஆலன் (1), ரச்சின் ரவீந்திரா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
14 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டிம் ஷெய்பர்ட்டுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை பதம் பார்த்தார். அதிரடியாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசிய நிலையில் ரஷித் கான் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது.
தனது 14-வது அரை சதத்தை கடந்த டிம் ஷெய்பர்ட் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நபி பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மார்க் சாப்மேன் 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்தில் ஆட்டமிழந்தார்.
16 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் மிட்செல் சாண்ட்னர் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் டேரில் மிட்செல் 14 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்களும் விளாச நியூஸிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அஸ்மதுல்லா ஓமர்ஸாய், ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 13 பந்துகளை மீதம் வைத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முழுமையாக 2 புள்ளிகளை பெற்றது.
நியூஸிலாந்து அணி டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் 170 ரன்களுக்கு மேலான இலக்கை வெற்றிகரமாக இதற்கு முன்னர் துரத்தியது இல்லை. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 167 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி கண்டிருந்தது அதிகபட்சமாகும். தற்போது முதன் முறையாக 183 ரன்கள் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
2 ஆயிரம் ரன்கள்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் டிம் ஷெய்பர்ட் 65 ரன்கள் விளாசினார். அவர், 47 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச டி 20 அரங்கில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் 2 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை அவர், பெற்றார்.
இந்த மைல் கல்லை எட்ட அவர் 1395 பந்துகளை எடுத்துக்கொண்டார், இது ஐசிசி-யின் முழு உறுப்பினர் நாட்டைச் சேர்ந்த பேட்ஸ்மேனின் ஐந்தாவது அதிவேக சாதனையாகும். இந்த வகை சாதனையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர், 1,164 பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தார்.
‘சுழல் எடுபடவில்லை’
சேப்பாக்கம் ஆடுகளம் எப்போதுமே சுழற்பந்து வீச்சு ஓரளவு கைகொடுக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி 67 ரன்களை தாரை வார்த்தனர்.
முகமது நபி ஒரு ஓவரை வீசிய நிலையில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒட்டுமொத்தமாக சுழலில் வீசப்பட்ட 9 ஓவர்களில் நியூஸிலாந்து 85 ரன்களை வேட்டையாடியது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 6 ஓவர்களை வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தனர்.
3-வது இடத்தில் பிலிப்ஸ்
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலமை பின்னுக்குதள்ளி 3-வது பிடித்தார் கிளென் பிலிப்ஸ்.
29 வயதான கிளென் பிலிப்ஸ் 89 டி 20 போட்டிகளில் விளையாடி 2,147 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகையில் மார்ட்டின் கப்தில் 3,531 ரன்களுடன் முதலிடத்திலும், கேன் வில்லியம்சன் 2,575 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
180-ல் முதல் தோல்வி
சர்வதேச டி20 அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களுக்கு மேல் குவித்த ஆட்டங்களில் தற்போதுதான் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 180 ரன்களுக்கு மேல் குவித்த 25 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது.



