ரூ.13 கோடியே 62 லட்சம் செலவில் கோவளம் உள்ளிட்ட 11 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
கோவளம் ஊராட்சி மற்றும் 10 ஊரகக் குடியிருப்புபகுதிகளுக்கு ரூ.13 கோடியே 62 லட்சம் மதிப்பில் உயிர் நீர் இயக்கம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் பங்களிப்புடன் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்காக புதுப்பாக்கம் கிராமத்தில் 5 திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து 10 கிமீ தூரத்துக்கு குழாய்கள் புதைக்கப்பட்டு கோவளம் நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்துக்காக ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ஒரு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் புதியதாக ஒரு தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் கோவளம் ஊராட்சி மற்றும் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 10 ஊரகக் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் பயன் பெறுவர்.
இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவளத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் செங்கை ஆட்சியர் சினேகா புதிய திட்டத்தின் கல்வெட்டை திறந்து வைத்து குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன், அரி பாஸ்கர் ராவ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



