கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், தாம்பரத்தில் தங்கியுள்ள அவரது மகளான கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
கேரளா மாநிலத்தில், நெடும்பரம்பில் கிரெடிட் சிண்டி கேட் என்ற நிதி நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்து, ஏராளமான முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வட்டித் தொகையையும், முதலீடு செய்த தொகையையும் திருப்பி வழங்காமல், பொதுமக்களை ஏமாற்றிய தாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கேரள மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
சட்ட விரோத பணபரிவர்த்தனை இந்த விசாரணையின்போது, சட்டவிரோத பணப்பரிவர்த் தனைகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இதில், கேரளா முழுவதும் முதலீட்டாளர்களை மூளைச்சலவை செய்து, பெருமளவு தொகைகளை முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்துள்ளது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், முதலீட்டாளர்களின் பணம் பல்வேறு துணை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதும், பெரும் தொகை ரொக்கமாக எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாகப் பெற்ற நிதி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இதனையடுத்து, கேரளாவில் அந்நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்நிறுவன உரிமையாளரின் மகள் ஆஸ்லின், கிழக்கு தாம்பரத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பிஎச்.டி மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், அந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாகத் தங்கி கல்வி பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தந்தைக்கு உதவியாக மாணவர்களைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் தங்கியிருந்த வீட்டின் அறையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, மாணவியின் மடிக்கணினி, செல்போன் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீஸாருடன், ஏழு பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நிறைவடைந்த பிறகே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.



