இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வடக்கு சுலவேசி காவல் துறை செய்தித் தொடர்பாளர் அலாம்சியா ஹசிபுவான் நேற்று கூறியதாவது: இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 16 முதியவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிர்பிழைத்த 15 முதியவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த முதியவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காண்பதற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலையடுத்து 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க இரண்டு மணி நேரத்துக்கும் மேலானது.
ஆரம்ப கட்ட விசாரணையின்படி மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும், இறுதி விசாரணைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

