மியான்மரில் ஆங் சான் சூகி அரசை நீக்கிவிட்டு 2021 முதல் ராணுவப் புரட்சி மூலம் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் ஆட்சி புரிந்து வருகிறார்.
தற்போது ஆங் சான் சூகி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சூழலில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, ராணுவ அரசின் கண்காணிப்பின் கீழ் நேற்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தல் ஜனவரி 11-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் ஜனவரி 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனிடையே, இந்த தேர்தல் ஒரு ஏமாற்று வேலை என ஐ.நா. சபையும் மேற்கத்திய நாடுகளும் குற்றம்சாட்டி உள்ளன. குறிப்பாக ராணுவ ஆட்சியை ஜனநாயக ஆட்சியாக மாற்றுவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப் படுவதாகவும் ராணுவத் தளபதி மின் ஆங் அதிபராவார் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகள் தேர்தல் பார்வையாளர்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.



