அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்தியாவின் நடப்புறவை இழக்க நேரிடும் என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.சிட்னி காம்லாகர்-டோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவை நோக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கை இருநாடுகளுக்கு இடையிலான நீடித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ட்ரம்ப் தனது கடினமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்திய நடப்புறவின் இழப்புக்கு காரணமானவராக வரலாற்றில் அதிபர் ட்ரம்பின் பெயர் இடம்பெறும். இரு தரப்பு உறவிலும் ஏற்படும் சேதத்தை குறைக்க அமெரிக்கா மின்னல் வேகத்தில் தற்போது செயல்பட வேண்டியது அவசியம். அமெரிக்காவின் இந்திய புறக்கணிப்பு ரஷ்ய சாம்ராஜ்யத்தை புத்துயிர் பெறச் செய்துவிடும்.
இந்தியா மீதான ட்ரம்பின் விரோதம் எங்கிருந்து தொடங்கியது என்பது பற்றி வரலாற்று புத்தகங்கள் எழுதப்படும் போது அவை நமது நீண்ட கால நலன்களுக்கு தொடர்பு இல்லாத ஒன்றை சுட்டிக்காட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







