‘‘இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுக்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. அதை மீறி தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வேளாண் பிரதிநிதிகள் வட்ட மேசை மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கேபினட் அதிகாரிகள், கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட், வேளாண் துறை அமைச்சர் புரூக் ரோலின்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்திய ட்ரம்ப், விவசாயிகளுக்கு 12 பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்தார்.
பின்னர் அமைச்சர் பெசன்ட்டை பார்த்து, ‘‘இந்தியாவுடனான வர்த்தக நடைமுறையை எனக்கு சொல்லுங்கள். வேளாண் விளைபொருட்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதை ஏன் அனுமதிக்கிறீர்கள். அவர்கள் வரி செலுத்த வேண்டும்.அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா வரி விலக்கு பெற்றுள்ளதா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு,‘‘இல்லை… இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்’’ என்று பெசன்ட் பதில் அளித்தார்.
அதற்கு ட்ரம்ப் கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்குள் அரிசியை இந்தியா குவிக்க முடியும். அப்படி நடக்கிறது என்று பிறர் மூலம் அறிந்து கொண்டேன். அதை அவர்கள் செய்யக் கூடாது. இந்திய அரிசிகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும். அது ஒன்றுதான் பிரச்சினையை தீர்க்கும்’’ என்றார்.
இதுகுறித்து, ‘குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்’ (ஜிடிஆர்ஐ) அமைப்பினர் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: வர்த்தக லாஜிக் எதுவும் இல்லாமல் உள்ளூர் அரசியல் காரணங்களுக்காகவே அதிபர் ட்ரம்ப் அரிசிக்கு கூடுதல் வரி விதிப்பேன் என்று கூறுவதாக தெரிகிறது. நடப்பு நிதியாண்டு 2025-ல் இதுவரை 392 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் அளவில் 3 சதவீதம் மட்டுமே. இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்தாலும் அது இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதிக்காது. இந்திய அரிசிக்கு சர்வதேச அளவில் வலிமையான மார்க்கெட் உள்ளது. ஆனால், அமெரிக்க மக்கள்தான் இதனால் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
அமெரிக்க மக்களையே பாதிக்கும்: இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (ஐஆர்இஎப்) துணைத் தலைவர் தேவ் கார்க் கூறியதாவது: இந்திய அரிசி ஏற்றுமதிக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான இடம்தான். எனினும், சர்வதேச அளவில் இந்திய அரிசிக்கு நிறைய டிமாண்ட் உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயலாற்றி வருகிறோம். தற்போதுள்ள வர்த்தக ஒத்துழைப்பை தொடர்வதுடன், சர்வதேச அளவில் புதிய மார்க்கெட்டில் இந்திய அரிசியை இடம்பெற செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இந்திய பாசுமதி அரிசிக்கான சந்தையில், சர்வதேச அளவில் அமெரிக்கா 4-வது இடத்தில் உள்ளது. பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசிக்கான சந்தையில் அமெரிக்கா 24-வது இடத்தில் உள்ளது. இந்திய பாசுமதி அரிசியைப் பொறுத்த வரையில், வளைகுடா நாடுகள்தான் அதிகம் வாங்குகின்றன. வளைகுடா நாடுகளில் இந்திய பாசுமதி அரிசிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய உணவு வகைகளுக்கு குறிப்பாக பிரியாணி போன்ற உணவுகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அதற்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது. அமெரிக்காவில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசி, இந்திய பாசுமதி அரிசிக்கு ஈடாகாது. ஏனெனில், இந்திய பாசுமதி அரிசியின் நீளம், மணம், சுவை போன்றவை தனித்துவமானவை.
கூடுதல் வரி விதிப்புக்கு முன்பு, அமெரிக்கா இறக்குமதி செய்த பாசுமதி அரிசிக்கு 10 சதவீத வரிதான் விதிக்கப்பட்டது. அதன்பிறகு 50 சதவீதமானது. அதன்பிறகும் ஏற்றுமதி நிலைத்திருக்கிறது. இது அமெரிக்க மக்களுக்கு அடிப்படை முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேநேரத்தில் பாசுமதி உட்பட இந்திய அரிசிக்கு கூடுதல் வரி விதித்தால், அது அமெரிக்க மக்களையே பாதிக்கும்.
இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை கிடைத்து வரும் வருவாயில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் பாசுமதி உட்பட இந்திய அரிசிக்கான சில்லரை விலைதான் அதிகரிக்கும். கூடுதல் வரியின் சுமை அமெரிக்க மக்களையே பாதிக்கும். இவ்வாறு தேவ் கார்க் கூறியுள்ளார்.







