இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்துடன் கூடிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்ட நேபாளம்: மீண்டும் எல்லை குறித்து சர்ச்சை

0
79

வியாழக்கிழமை அன்று புதிய 100 ரூபாய் நோட்டை நேபாளம் வெளியிட்டது. அதில் அந்த நாட்டின் வரைபடத்தில் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று இந்திய பகுதிகள் இடம்பெற்றுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2020, ஜூன் 18-ம் தேதி நேபாளம் அதன் அரசியல் அமைப்பை திருத்துவதன் மூலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் வரைபடத்தைப் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்தது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியது.

இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இளம் தலைமுறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இந்த சூழலில் தற்போது அந்த நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்டிர வங்கி புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நேபாள நாட்டின் வரைபடத்தில் சர்ச்சை அளிக்கும் விதமாக இந்திய பகுதியின் மூன்று இடங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த புதிய 100 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியை சீன நிறுவனத்தின் வசம் நேபாள அரசு அளித்துள்ளது.

அப்போதே நேபாளத்தின் பிராந்திய எல்லையை நீட்ட கோரும் செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய பகுதியை சேர்த்து நேபாளம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த புதிய 100 ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் எவரெஸ்ட் சிகரமும், வலது பக்கத்தில் நேபாளத்தின் தேசிய மலரான ரோடோடென்ட்ரானின் வாட்டர் மார்க் இடம்பெற்றுள்ளது. நோட்டின் மையத்தில் நேபாள வரைபடம் மற்றும் அசோகத் தூணின் விளக்கமும் உள்ளன, அதே நேரத்தில் முக்கிய வடிவமைப்பில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here