கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
மேலும், கோவைக்கு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் பலமுறை தமிழகத்துக்கு வந்தபோதும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அவரை சந்திக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ள சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்துள்ளது. இதையடுத்து, கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். மேலும், இயற்கை விவசாயிகள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதால், பழனிசாமியும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜகவின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இச்சூழலில், பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்பது அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.














