“தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்து வருகிறார். சாட்சியாபுரம், திருத்தங்கல், சாத்தூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை அமைக்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு. அதற்கு முயற்சி எடுத்தது நான். இன்றைய திமுக அரசால் மத்திய அரசிடம் அனுமதி பெற முடியுமா? மத்தியில் இருப்பது உங்கள் ஐயா அல்ல… எங்கள் டாடி மோடி.
மாணிக்கம் தாகூர் எம்.பி. கேட்டால் அனுமதி கிடைக்காது. விருதுநகர் மாவட்டத்திற்கு எதுவுமே செய்யாதவர் மாணிக்கம் தாகூர். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு காங்கிரஸ் கட்சியும் தேவையில்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டும் தான் பலமான கட்சிகள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று, அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும்.
அதிமுக அல்லது திமுக என்பது தான் மக்களின் முடிவு. தொற்றிக் கொண்டு வரும் உங்களுக்கு (காங்கிரஸ்) ஏன் இவ்வளவு? ரயில்வே மேம்பாலம், சுற்றுச்சாலை திட்டத்தில் இந்த அரசின் பணிகளுக்கு பாராட்டுகள். ஆனால், அதிமுக எதுவுமே செய்யவில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. அதிமுக ஆட்சியில் ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கலாம்.
ஆனால் திமுக ஆட்சியில், தவறுகள் மட்டுமே நடக்கின்றன. திமுக அரசு தென் மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து அதிக திட்டங்களைப் பெறவேண்டு மானால் அதற்கு அதிமுக வெற்றி பெற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வராக பதவி ஏற்கும் போது நானும் அவர் அருகில் இருக்கும் முக்கியமானவர்களில் ஒருவனாக இருப்பேன். சிவகாசி தொகுதிக்கும் மக்களுக்கும் பல திட்டங்களை கொண்டு வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.














