அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து டிவிடெண்டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதை உற்பத்தி செய்யும் நாட்டைப் பொறுத்து 10 முதல் 50% வரை வரி விதித்தார். நீண்டகாலமாக நிலவும் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவே இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ட்ரம்ப் நடவடிக்கையின் சட்டபூர்வமான தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியது. இதனால் பல வரிகள் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை திருப்பித் தர வேண்டிய நிலை ஏற்படும். இதனிடையே, தனக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அது ஒரு பேரழிவாக இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதால், அமெரிக்கா பணக்கார மற்றும் உலகில் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறும். வரி விதிப்பு பற்றி குறை கூறுபவர்கள் முட்டாள்கள். வரி வருவாயிலிருந்து பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு (பணக்காரர்கள் தவிர) தலா 2 ஆயிரம் டாலர் விரைவில் டிவிடெண்டாக வழங்கப்படும்’’ என பதிவிட்டுள்ளார்.
தனது வர்த்தக கொள்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவே, 2 ஆயிரம் டாலர் (ரூ.1.77 லட்சம்) வழங்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த தொகை எப்படி வழங்கப்படும் என்ற குழப்பம் நிலவி வந்தது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறும்போது, “பொதுமக்களுக்கான 2 ஆயிரம் டாலர் டிவிடெண்ட் தொகை பல்வேறு வழிகளில் வழங்கப்படும். குறிப்பாக, வரி குறைப்பு செய்ய ட்ரம்ப் திட்டிமிட்டிருக்கலாம். அத்துடன் டிப்ஸ்கள், கூடுதல் நேரம் பணிபுரிய, சமூக பாதுகாப்பு, வாகன கடன் ஆகியவற்றுக்கு வரி விலக்கு வழங்க திட்டமிட்டிருக்கலாம்’’ என்றார்.














