டெல்லியில் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் மீண்டும் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்பியல் கோளாறு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து துவாரகாவின் எச்சிஎம்சிடி மணிப்பால் மருத்துவமனையில் கீதாவை சேர்த்தனர். அங்கு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து வென்டிலேட்டர் போன்ற உயிர்க் காக்கும் கருவிகள் உதவியுடன் கீதாவை வைத்திருக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. பின்னர் நவம்பர் 6-ம் தேதி இரவு கீதா உயிரிழந்தார்.
ஆனால், தனது உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கீதா கடைசி ஆசையை தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது உறுப்புகளை தானம் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கீதாவின் உடலுக்கு பிரேதப் பரிசோதனையின்போது மருத்துவர் குழுவினர் மிகவும் சிக்கலான மற்றும் அரிதான செயலை செய்தனர். கீதாவின் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை எடுத்து தானம் செய்வதற்காக, அந்தப் பகுதியில் மீண்டும் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்தனர். இதை நார்மோதெர்மல் ரீஜினல் பர்பியூஷன் (என்ஆர்பி) செயல்முறை என்கின்றனர்.
இதன்படி மருத்துவர்கள் வெற்றிகரமாக கீதாவின் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை கொண்டு வந்தனர். பின்னர் அந்த உறுப்புகள் எடுக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டன. இதயம் செயலிழந்த 5 நிமிடத்துக்கு பிறகு கீதாவின் உயிர் பிரிந்துவிட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆசியாவிலேயே இதுபோல் இறந்த பெண்ணின் உடலுக்கு ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து உறுப்புகளை எடுத்த மருத்துவ நடைமுறை டெல்லி மணிப்பால் மருத்துவமனையில்தான் நடந்துள்ளது என்று மணிப்பால் இன்ஸ்டிடியூட்டின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் கூறினார்.
இந்தியாவில் இதயம் இயங்கினாலும், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள்தான் தானம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இதயம் செயலிழந்து ரத்த ஓட்டம் நின்ற பிறகு உறுப்புகளை பாதுகாப்பது சிக்கலானது. இதில் நேரம் மிகமிக சிக்கலானது. ஆனால், என்ஆர்பி நடைமுறையை பயன்படுத்தி இதயம் நின்ற பிறகும் உடனடியாக ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து அவருடைய கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பாதுகாத்தோம் என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கீதாவின் உறுப்புகளை உடனடியாக வேறு நோயாளிகளுக்குப் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பு ஏற்பாடு செய்தது. அதன்படி கீதாவின் கல்லீரல் ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் 48 வயது ஆணுக்கும், 2 சிறுநீரகங்கள் மேக்ஸ் மருத்துவமனையில் 2 ஆண்களுக்கும் பொருத்தப்பட்டன. கீதாவின் கருவிழிகள், தோல் கூட தானம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மணிப்பால் மருத்துவமனை டாக்டர் அவினாஷ் சேத் கூறும்போது, ‘‘தற்போது ஆசியாவிலேயே முதல் முறையாக ரத்த ஓட்டத்தை மீண்டும் கொண்டு வந்து உறுப்புகள் பத்திரமாக எடுக்கப்பட்டதால், எதிர்காலத்தில் இறந்த பிறகும் உறுப்பு தானம் வழங்குவது சாத்தியமாகும்’’ என்று தெரிவித்தார்.














