சர்வதேச அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா, ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று தகைச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஜப்பான் புதிய பிரதமர் சனே தகைச்சியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.
அத்துடன் பொருளாதார பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பான தொலைநோக்கு பார்வை குறித்து ஆலோசித்தோம். உலக அளவில் அமைதி, ஸ்திரத்தன்மை, மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கு இந்தியா – ஜப்பான் இடையே வலுவான உறவு முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.














