வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்! – 30 தொகுதிகள் கேட்கும் அன்புமணி

0
40

திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர வரிசையாக காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணியிடமும் பாஜக தரப்பிலிருந்து பக்குவமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்.

ஆனால், தலைவர் அன்புமணியோ பாஜக கூட்டணியை விரும்பினார். இறுதியில், அன்புமணியின் விருப்பப்படியே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அதுவரைக்கும் ராம தாஸ் – அன்புமணி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இந்தக் கூட்டணி முடிவை அடுத்து மோதல் போக்காக மாறியது.

அது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்து பாமக இரண்டுபட்டுக் கிடப்பதால் அந்தக் கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அதேசமயம், மக்களவைத் தேர்தலில் ராமதாஸ் விரும்பிய அதிமுகவும், அன்புமணி விரும்பிய பாஜகவும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றுபட்ட பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அதிமுகவும், பாஜகவும் தொடங்கியுள்ளன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜக தேசிய துணைத் தலைவரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி., அண்மையில் சென்னையில் அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அவர் ராமதாஸையும் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், விஜய்யை கூட்டணியில் சேர்க்கவும் அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கரூர் சம்பவ நெருக்கடியால் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாத நிலையில் இருக்கும் விஜய்யும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக, பாஜக, தவெக கட்சிகளுடன் இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று கணக்குப் போட்டு அந்தக் கூட்டணியில் இணைய அன்புமணியும் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேசமயம் கட்சியை பலப்படுத்தவும், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும் தங்களுக்கு இம்முறை கணிசமான எம்எல்ஏ-க்கள் தேவை என்பதால் தொடக்கமே 30 தொகுதிகளை டிமாண்ட் வைத்து அன்புமணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here