கிரிக்கெட்டில் சில சமயம் எல்பிடபிள்யூ விஷயத்தில் களத்தில் இருந்த நடுவர் ஏற்கெனவே முடிவு எடுத்திருப்பார். ஆனால் டிஆர்எஸ் முறையில் வேறு மாதிரியான முடிவு வருவது போன்று தெரிந்தாலும் போதுமான ஆதாரங்களுடன் நடுவர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடியாத சூழ்நிலை வந்தால் அது அம்பர்யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வருவார்கள்.
களத்தில் உள்ள நடுவர் எடுத்த முடிவை டிஆர்எஸ் முறையில் மாற்ற வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளன. 3 ஸ்டெம்ப்கள் மற்றும் அதன் மீது உள்ள பெயில்ஸ்களை விக்கெட் ஸோன் என அழைப்பார்கள். இதன் மேல் விளிம்பு வரை டிஆர்எஸ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
டிஆர்எஸ் முறையில் பால் டிராக்கிங் செய்யும் போது அது விக்கெட் ஸோனில் எந்த இடத்தில் இம்பாக்ட் ஆகி உள்ளது என்பதை பொறுத்துதான் களத்தில் உள்ள நடுவர் எடுத்த முடிவை மாற்றலாமா? வேண்டாமா? என்பது முடிவு செய்யப்படும்.
களநடுவரின் முடிவு நாட் அவுட் என இருந்து, அதை டிஆர்எஸ் முறையில் அவுட் என நிரூபிக்க வேண்டும் என்றால் பந்தின் மேற்பரப்பில் 50 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் ஸோனுக்குள் இம்பாக்ட் ஆகியிருக்க வேண்டும். அதாவது ஸ்டெம்புகள் அல்லது பெயில்ஸ் பட்டது போன்று காட்ட வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே களநடுவர் நாட் அவுட் என்று அளித்த தீர்ப்பை மாற்றி அவுட் என அறிவிக்க முடியும்.
மற்றபடி அந்த பந்தின் மொத்த மேற்பரப்பில் 50 சதவீதத்துக்கு கீழ் விக்கெட் ஸோனில் இருந்தால் நடுவர் எடுத்த நாட் அவுட் முடிவை மாற்ற முடியாது. 2-வது களநடுவரின் முடிவு அவுட் என இருந்து அதை டிஆர்எஸ் முறையில் நாட் அவுட் என அறிவிக்க வேண்டுமானால் பந்தின் மேற்பரப்பு ஒரு சதவீதம் கூட விக்கெட் ஸோனுக்குள் இம்பாக்ட் ஆகியிருக்கக்கூடாது. ஒருவேளை ஒரு சதவீதம் விக்கெட் ஸோனுக்குள் இம்பாக்ட் ஆகியிருந்தால் நடுவரின் அவுட் முடிவை மாற்ற முடியாது.
என்னதான் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தினாலும் அதை 100 சதவீதம் சரி என்று கூறிவிட முடியாது. ஏனெனில் பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பை தாக்கிய பின்னர் திரையில் காட்டப்படும் அனைத்தும் ஒருவித கணிப்புதான்.
பந்து தரையில் பிட்ச் ஆன பின்னர் எவ்வளவு பவுன்ஸ் ஆகி உள்ளது, எவ்வளவு திரும்பி உள்ளது, எவ்வளவு ஸ்விங் ஆகி உள்ளது என ஏற்கெனவே உள்ள தரவுகளை வைத்துதான் செயல்முறைபடுத்துவார்கள். இதில் குறைந்தது 5 சதவீதம் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஒருவேளை இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை கண்மூடித்தனமாக நம்பினால் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் போட்டியில் சமநிலை இல்லாமல் போய்விடும். மேலும் களநடுவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கான தேவை இல்லாமல் போய்விடும். நடுவர்கள்தான் போட்டி முழுவதும் களத்தில் இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்களின் அருகே இருந்து தங்களது திறமை, அனுபவங்களால் முடிவுகளை எடுக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு பக்கமும் எடுக்கும் முடிவுகளுக்கு சம அளவிலான வாய்ப்பை வழங்குவதற்காக டிஆர்எஸ் அமைப்பு உள்ளது.