இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. எனினும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நித்திஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
முதல் டெஸ்டில் சதம் விளாசிய கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். அதே வேளையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் சீராக ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தக்கூடும். இது ஒருபுறம் இருக்க சாய் சுதர்சன் நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத சாய்சுதர்சன், அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் சாய் சுதர்சன், ரன் வேட்டை நிகழ்த்துவது அவசியம்.
பந்து வீச்சில் முதல் போட்டியில் முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றுவதில் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும்.
ராஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் இரு இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 89.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அத்துடன் பந்து வீச்சிலும் அந்த அணி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வலுவான இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் அந்த அணி அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக ஜோஹன் லைன் நீக்கப்பட்டு இடது கை மிதவேகப்பந்து வீச்சாளரான ஜெடியா பிளேட்ஸ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
டெல்லி ஆடுகளம் முதல் 2 நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸை வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
சாதனையை நோக்கி ஜடேஜா: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை கடக்க இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவுக்கு மேற்கொண்டு 10 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. டெல்லி டெஸ்ட் போட்டியில் இதை அவர், எடுக்கும் பட்சத்தில் 300 விக்கெட்கள் மற்றும் 4 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த சாதனையை இதற்கு முன்னர் இயன் போத்தம், கபில் தேவ், டேனியல் வெட்டோரி ஆகியோரும் நிகழ்த்தி உள்ளனர்.
மைதான ராசி எப்படி? 2- வது டெஸ்ட் போட்டி நடைபெறும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணி கடந்த 1987- ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை. இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி 12 வெற்றிகளை பெற்றுள்ளது. 12 டிராவை பதிவு செய்துள்ளது.