சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்? என்று தெரியுமா? பெரும்பாலானோர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுவார்கள். ஆனால் அது தவறு.
சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 24 வருடங்கள் விளையாடினார். 200 டெஸ்டில் விளையாடி 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 463 ஆட்டங்களில் விளையாடி 49 சதங்கள், 96 அரை சதங்களுடன் 18,426 ரன்கள் வேட்டையாடினார். டி20ல் மட்டும் ஒரே ஒரு ஆட்டத்தில் பங்கேற்று 10 ரன்கள் சேர்த்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகளும் வாங்கிய விருதுகளும் ஏராளம்.
ஆனால் கிரிக்கெட் வரலாற்றை கவனித்தால் சச்சின் டெண்டுல்கரை விட அதிக வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் வில்பிரெட் ரோட்ஸ், டெனிஸ் பிரையன் குளோஸ், பிராங்க் எட்வர்ட் வூலி (இங்கிலாந்து), மேற்கு இந்தியத் தீவுகளின் ஜார்ஜ் அல்போன்சோ ஹெட்லி ஆகியோர் உள்ளனர். இதில் முதலிடத்தில் இருப்பவர் இங்கிலாந்தின் வில்பிரெட் ரோட்ஸ், 1898-ல் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய அவர், 1899-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார். இடதுகை சுழற்பந்து வீச்சில் அபார செயல்திறனை வெளிப்படுத்தினார். பின்னர் படிப்படியாக பேட்டிங்கிலும் திறனை வளர்த்தார்.
இதனால் சிறந்த நடுவரிசை பேட்ஸ்மேனாக உருவெடுத்த அவர், ஆல்ரவுண்டராக மாறினார். அவர் விளையாடிய காலகட்டத்தில் ஒருநாள் போட்டி, டி20 வடிவங்கள் கிடையாது. டெஸ்ட் போட்டி மட்டுமே இருந்தது. சர்வதேச அளவில் அவர், 1899-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 12 வரையிலான காலகட்டத்தில் 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,325 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் 127 விக்கெட்கள் கைப்பற்றினார். உள்ளூர் கிரிக்கெட்டில் யார்க்ஷையர் அணிக்காக 1,110 போட்டிகளில் விளையாடி 39,969 ரன்களும் 4,204 விக்கெட்களையும் வேட்டையாடினார். கடைசியாக டெஸ்ட் போட்டி விளையாடிய போது அவருக்கு வயது 53. அவர், மொத்தமாக 30 ஆண்டுகள் 315 நாட்கள் கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றார்.