தமிழக அரசியல் களத்தில் எல்லா விவகாரங்களிலும் அச்சப்படாமல் தன் கருத்தை முன் வைப்பதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிகர் சீமான் தான். கரூர் சம்பவத்தில் தொடங்கி, கடல் மாநாடு வரை தனது கருத்துகளை இந்த நேர்காணலில் வரிசைப்படுத்தியிருக்கிறார். அதில் இருந்து….
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் விபத்தா அல்லது சதியா?
மற்ற ஊர்களில் விஜய் பிரச்சாரம் செய்த இடங்கள் நான்கு வழிச் சாலைகளாக இருந்தன. கரூரில் நேர் சாலையாக இருந்ததால், கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு உயிர் பலி நடந்துள்ளது. எனவே, இது ஒரு விபத்துதான். மேலும், நான்கு மாதத்தில் தேர்தல் வரும் நிலையில், திட்டமிட்டு உயிர்பலியை ஏற்படுத்தினால், அது எவ்வளவு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது அரசுக்கும் தெரியும்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி குற்றம் சாட்டுவது சரியா…
செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுபவர்கள், சரியான காரணத்தைச் சொல்ல வேண்டும். கூட்டத்தில் புகுந்த சிலர், கத்தியை வைத்து கிழித்து காயப்படுத்தியதாகச் சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் அப்படி யாரும் சேர்க்கப்படவில்லை. அதோடு கழுகு பார்வையில், ஊடகங்கள் காட்சிகளை பதிவு செய்த நிலையில், ஒரு கூட்டத்திற்குள், சம்பந்தமில்லாமல் சிலர் ஊடுருவினார்கள் என்றால், அது காட்சிப்படுத்தப்பட்டு, வெளியாகி இருக்குமே.
விஜய் பிரச்சார கூட்டங்களுக்கு ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தருவதாக நீங்கள் நினைக்கிறீர்களா..?
ஆம். ஊடகங்கள் திட்டமிட்டு இதனை செய்கின்றன. நடிகர் என்பதால், தம்பி விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் கூடுகிறது.சகோதரர் அஜீத்தை இறக்கி விட்டால், இதுபோன்று இரண்டு மடங்கு கூட்டம் வரும். சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு என யார் வந்தாலும் கூட்டம் வரும். இதை ஊடகங்கள் உணர்ந்து, திரைகலைஞர் என்ற ஒரு காரணத்திற்காக முக்கியத்துவம் தருவதை நிறுத்த வேண்டும்.
கரூர் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து, விஜய் ஒரு காணொலிக் காட்சியை வெளியிட்டார். அது உங்களுக்கு ஏற்புடையதா…
விஜய் அங்கு வரவில்லை என்றால், அந்த கூட்டமும் இல்லை. இப்படி ஒரு சம்பவமும் இல்லை. இதை உணர்ந்து நடந்த சம்பவத்திற்கு மன்னித்து விடுங்கள் என்று சொல்வதற்கு கூட விஜய் தயாராக இல்லை.
திமுக நெருக்கடி கொடுப்பதால், கொள்கை எதிரியாக அறிவித்த பாஜகவுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளாரா..
பாசிச கட்சி என்று விமர்சித்தவரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை வழிநடத்தும் தகுதி இபிஎஸ்க்கு இல்லை என்று விமர்சனம் செய்த விஜய்க்கு அதிமுகவும் ஆதரவு கொடுக்கிறது. ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் இவர்கள் பேசியதை திரும்பப் பெறுவார்களா?
நெருக்கடியான நேரத்தில் விஜய்க்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாமா? உங்களிடம் அவர் ஆதரவு கேட்கவில்லையா?
தம்பி விஜய் மீது எனக்கு பற்று, பாசம் இருக்கிறது. ஆனால், அவர் முன்வைக்கின்ற அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? தமிழர் அரசியலுக்கு பெரியார் தான் அடையாளம் என்பதை என்னால் ஏற்க முடியாது.
திமுகவை அரசியல் எதிரி என அறிவித்தால், அதனை எப்படி வீழ்த்த வேண்டும் என பேச வேண்டும். பாஜக கொள்கை எதிரி என்று விஜய் சொல்கிறார். அப்படியென்றால், காங்கிரஸ் கொள்கை நண்பனா? பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் கொள்கையில் ஒரு மாறுபாடும் இல்லை என்பது கூட அவருக்கு புரியவில்லை.
காணொலியில் விஜய் சவால் விடுத்தும், அரசு அவர்மீது வழக்கு பதியவில்லையே… விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா…
தேர்தல் நேரத்தில், அவர் மீது வழக்கு போட்டு, தேவையில்லாமல் எதற்காக பெரிதாக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதுபோல, விஜய் விரும்பி இதைச் செய்யவில்லை. எனவே, ,அவரை குற்றவாளியாக ஆக்க முடியாது. விஜய் மீது வழக்கு போட்டு சிறைப்படுத்துவதால், இறந்தவர்கள் வந்து விடப் போகிறார்களா?
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளதே…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, இதே நீதிபதியைக் கொண்ட ஆணையம் தான் விசாரணை நடத்தியது. அவர்கள் கொடுத்த அறிக்கையின் மீது திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எனவே, தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையம் விசாரணையை முடிக்கும்போது தேர்தல் வந்து விடும், அந்த நேரத்தில், யார், யாருடன் கூட்டு, dஇருப்பார்களோ தவிர, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.
கரூரில் விசாரணை நடத்திய பாஜக எம்பிக்கள் குழு, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்கிறதே…
குஜராத், மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்காத பாஜக, கரூர் சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விவகாரத்தில், அதிமுக ஆட்சியிலும் இந்த தவறு நடந்துள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளாரே…
அரசாங்கம் சாராயம் விற்பதே கொடுமை. இதில், கூடுதலாக பத்து ரூபாய் வைத்து விற்றுவிட்டு, அவர்களும் தான் விற்றனர் எனச் சொல்வது அருவருக்கத்தக்கது.
மாடு, மரம், நீர், கடல் இவற்றிற்கெல்லாம் மாநாடு நடத்தி, இதன் மூலமாக, ஏதாவது ஒரு தகவலை பொதுமக்களிடம் கடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இதனால் வாக்கு கிடைக்குமா என்று உங்களை கேலி செய்கிறார்களே…
இது போன்ற சிந்தனை ஆபத்தானது. நாட்டுக்காக போராடிய முன்னோர்கள், தங்களுக்கு சிலை வைத்து கொண்டாடுவார்கள் என்பதற்காகவா போராடினார்கள்? அது அவர்களின் கடமை என நினைத்தார்கள். அதுபோல், இதனை கடமையாக நான் செய்கிறேன்.