செப்டம்பர் 10 ஆம் தேதி டல்லாஸ் மோட்டலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா எனும் நபர், வாக்குவாதத்தால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
டெக்சாஸின் டெனிசன் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் இன்டர்ஸ்டேட் 30 இல் அமைந்துள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்தக் கொலை சம்பந்தமாக டல்லாஸ் காவல்துறையினர் யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் என்பவரை கைது செய்தனர். அவர் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தின்படி, நாகமல்லையா, மோட்டல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கோபோஸ்-மார்டினெஸ் மற்றும் அவருடன் வந்த பெண் சக ஊழியரை அணுகினார். ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாகமல்லையா அவர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமடைந்த கோபோஸ்-மார்டினெஸ் மோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் நாகமல்லையா துரத்தி சென்று கத்தியால் குத்தினார். நாகமல்லையாவின் மனைவியும் மகனும் வெளியே ஓடி வந்து தடுக்க முயன்றபோதும், அவர்களை தள்ளிவிட்டு கடுமையாக தாக்கினார். இதன்பின்னர் அவரின் தலையை துண்டித்து, உதைத்து தள்ளி குப்பைத் தொட்டியில் வீசினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
காவல்துறையினரின் தகவல்களின்படி, நாகமல்லையாவைக் கொல்ல கோபோஸ்-மார்டினெஸ் கத்தியைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,‘டல்லாஸ், டெக்சாஸில் உள்ள தனது பணியிடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகமல்லையாவின் துயர மரணத்திற்கு ஹூஸ்டன் இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவிக்கிறது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் டல்லாஸ் காவல்துறையின் காவலில் உள்ளார். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.