‘மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா’- ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வீடியோ வெளியீடு குறித்து அஸ்வின் காட்டம்!

0
147

ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறைந்த வீடியோவை வெளியிட்டது கடும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ‘ஸ்லாப்கேட்’ என்று வர்ணிக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டது குறித்து பலரும் சாடி வருகின்றனர்.

அஸ்வின் அந்த வீடியோ வெளியீட்டைக் கண்டிக்கையில், ‘அனகோண்டாவின் தலை மீண்டும் மீண்டும் எழும்புகிறது’ என்று வர்ணித்துள்ளார். அஸ்வின் தன் யூடியூப் சேனலில் இது தொடர்பாகக் கூறியபோது, “அனகோண்டாவின் தலை திரும்பவும் எழும்புகிறது. இந்த நவீன யுகத்தில் அனைத்தைப் பற்றியும் இங்கும் அங்கும் வீடியோ பதிவுகள் செய்யப்படுகின்றன. ஆகவே இப்படிப்பட்ட சம்பவங்கள் திரும்பத் திரும்ப பொதுவெளிக்கு வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இரு வீரர்களின் வாழ்க்கையில் இந்தச் சம்பவம் ஒன்றும் பெருமைக்குரியதாக இருக்கப் போவதில்லை. பின் எதற்காக அதை மீண்டும் வெளியிட வேண்டும்?

எதற்காக அதைத் தூண்டி விட வேண்டும்? ஸ்ரீசாந்த் மனைவியும் இதைக் கண்டித்துப் பதிவிட்டுள்ளார். நாம் அதை குறைந்த அளவுதான் பேச வேண்டும். இது முடிந்து போன ஒரு விஷயம். நம்மிடையே கூட ஹர்பஜன் இது குறித்துப் பேசி வருந்தினார். தான் செய்த தவறை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டார். தவறு செய்தால் அதனுடன் வாழ வேண்டியதுதான். இதில் இருவேறு வழிகள் இல்லவே இல்லை. ஆனால் நாம் அதைக் கடந்து விட்டோம் அல்லவா? வீடுகளில் இப்படி நம்மில் பலரும் நடந்து கொள்கிறோம் அது பொதுவெளிக்கு வராது.

எனவே நடந்து முடிந்து அதைக்கடந்து இருவருமே சென்று விட்ட ஒரு சம்பவம் குறித்து நாம் ‘தார்மிகக் காவல்’ ரோலை எடுத்துக் கொள்ள வேண்டாமே. இருவருமே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். கடந்து சென்று விட்டனர். மற்றவர்களும் அப்படி நகர வேண்டியதுதான்.” என்றார்.

இந்த வீடியோவை லலித் மோடி வெளியிட்டதையடுத்து ஸ்ரீசாந்த் மனைவி புவனேஸ்வரி அதைக் கண்டித்து காட்டமாக ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். “ஷேம் ஆன் யூ லலித் மோடி- மைக்கேல் கிளார்க். உங்கள் விளம்பரத்திற்காக எப்போதோ முடிந்த சம்பவத்தின் வீடியோவை வெளியிடுவீர்களா? இது மனிதர்கள் செய்ய்ம் செயலா? இப்போது ஸ்ரீசாந்த், ஹர்பஜன் இருவருமே தந்தையர்கள். மறந்து விட்டுக் கடந்து சென்ற நிலையில் பழைய காயத்தைக் கிளறுவீர்களா? அருவருப்பாக உள்ளது. உங்கள் செயல் இதயமற்றது, மனிதத்தன்மையற்றது.” என்று காட்டமாக விமர்சித்தார்.

ஹர்பஜன் சிங்கும், அந்த வீடியோ வெளியிட்டது மிகப்பெரிய தவறு, யாரும் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யக் கூடாது. சுயநல நோக்கம் தவிர இந்த வீடியோவை வெளியிட்டதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. மக்கள் மறந்து விட்டனர், அவர்களுக்கு இதை நினைவுபடுத்துகிறார்கள். தவறுகள் நடக்கவே செய்யும். நான் அந்தச் சம்பவத்தை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்.” என்று சாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here