ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு

0
175

ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர்.

ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்று அந்நாட்டின் வடமேற்கில் உள்ள ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 8.30) விபத்துக்குள்ளானது. லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 79 ஆப்கனியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கன் உள்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் மடீன் கானி இதனைத் தெரிவித்துள்ளார்.

சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லாததாலும், ஓட்டுநர்களின் கவனக்குறைவினாலும் ஆப்கனிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களில் ஈரானில் இருந்து 18 லட்சம் ஆப்கனியர்கள் வலுக்கட்டாயமாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல், கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தானில் இருந்து 1,84,459 பேரும், துருக்கியில் இருந்து 5,000 பேரும் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு சிறைகளில் இருந்த சுமார் 10,000 ஆப்கனியர்களும் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆப்கானியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதை அந்நாட்டு அரசு கடந்த ஜூலையில் கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் மற்றும் ஈரானில் ஆப்கனியர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறி அந்த நாடுகள் திருப்பி அனுப்புவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கன் அகதிகளுக்கான அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 60 லட்சம் ஆப்கானியர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here