கதாகாலட்சேபம் செய்பவர் மீதும் உ.பி.​யில் 2 வழக்குகள் பதிவு

0
268

உத்தரபிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்பவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இவர் ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பிராமணர் என பொய் கூறி மோசடி செய்ததாகவும் இரு வழக்குகள் பதிவாகி உள்ளன.

உ.பி.யின் அவுரய்யா நகரை சேர்ந்த முகுந்த்மணி சிங் யாதவ், கடந்த 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இவர், ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கதாகாலட்சேபங்களில் பிரபலமானவர்.

இவர், எட்டாவா மாவட்டத்தின் தந்தர்பூர் கிராமத்துக்கு கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் இவரை தாக்கியதுடன் மொட்டை அடித்து விரட்டியது. அப்போது அவரது உதவியாளரும் தாக்கப்பட்டார்.

பிராமணர் அல்லாத ஒருவர் பிரசங்கம் செய்யக்கூடாது என அக்கும்பல் தன்னை மிரட்டியதாக முகுந்த்மணி புகார் கூறினார். இது, உ.பி.யில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முகுந்த்மணி மீது தாக்குதல் நடத்திய நால்வரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் முகுந்த்மணி, அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் மீதும் போலீஸார் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தனது மனைவியை முகுந்த்மணி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தந்தர்பூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் திவாரி என்பவர் அளித்த புகாரின் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகுந்த்மணி பிராமணர் என பொய்கூறி பிரசங்கம் செய்து மோசடி செய்துள்ளதாக கிராமப் பஞ்சாயத்து அளித்த புகாரின் மீது மற்றொரு வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் ஒரே நாளில் முகுந்த்மணி தாக்கப்பட்ட விவகாரம் தலைகீழாக மாறி அவர் கைதாகும் சூழல் உருவாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here