‘நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது’ – ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப்

0
215

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

“அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். ஆனால், நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. நான் அந்த கேள்விக்கு பதில் அளிப்பேன் என நீங்கள் எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை.

ஈரானுக்கு நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள். நீங்கள் ஏன் இரண்டு வாரத்துக்கு முன்பு இதை செய்யவில்லை என கேட்டேன். நீங்கள் அதை செய்திருக்கலாம். உங்கள் தேசம் இருந்திருக்கும் என சொன்னேன்” என சிரித்தபடி ட்ரம்ப் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து மூலம் அமெரிக்க ராணுவம் ஈரானுக்கு எதிராக களம் இறங்குமா? இறங்காதா? என்ற யூகத்தை உலக நாடுகளின் இடையே எழுப்பியுள்ளார் ட்ரம்ப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here